why-dmk-emerged1

திமுக உருவானது ஏன்?

110.00

மலர்மன்னன் இப்புத்தகத்தை எழுதுகிறார் என்று கேள்விப்பட்டபோது கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. அண்ணாவைப் பற்றிய மிக அதீத மதிப்பீடு கொண்டவரும், திராவிட அரசியல் மீது கடும் விமர்சனம் உள்ளவரும், ஹிந்துத்துவச் சார்பு சிந்தனை உடையவருமான ஒருவர் திமுக தோன்றியது குறித்த வரலாற்றை எழுதினால் அது எப்படி இருக்கும் என்பதே அந்த ஆச்சரியத்துக்கு உரிய காரணம். உண்மையில் மேலே நான் சொன்ன மூன்று குணங்களும் ஒன்றோடு ஒன்று சேராதவை.

மலர்மன்னன் அண்ணாவைப் பற்றி வந்தடைந்த மதிப்பீடுகள், அவர் அண்ணாவுடன் தனிப்பட்ட வகையில் பழகியதால் ஏற்பட்டது என்பது, அவரை வாசித்தவரையில் நான் கண்ட ஒன்று. உண்மையில் எந்த ஓர் ஆளுமையுடன் பழகிய ஒருவரும், அவருடையை ஆளுமையைத் தங்களது தனிப்பட்ட அனுபவத்தின் மூலமும் எடையிட முயல்வார்கள் என்பது தெரிந்ததுதான். இதில் சில பயன்களும், பல பிரச்சினைகளும் உள்ளன.

2 in stock

Description

திமுக உருவானது ஏன்?

மலர்மன்னன் இப்புத்தகத்தை எழுதுகிறார் என்று கேள்விப்பட்டபோது கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. அண்ணாவைப் பற்றிய மிக அதீத மதிப்பீடு கொண்டவரும், திராவிட அரசியல் மீது கடும் விமர்சனம் உள்ளவரும், ஹிந்துத்துவச் சார்பு சிந்தனை உடையவருமான ஒருவர் திமுக தோன்றியது குறித்த வரலாற்றை எழுதினால் அது எப்படி இருக்கும் என்பதே அந்த ஆச்சரியத்துக்கு உரிய காரணம். உண்மையில் மேலே நான் சொன்ன மூன்று குணங்களும் ஒன்றோடு ஒன்று சேராதவை.

மலர்மன்னன் அண்ணாவைப் பற்றி வந்தடைந்த மதிப்பீடுகள், அவர் அண்ணாவுடன் தனிப்பட்ட வகையில் பழகியதால் ஏற்பட்டது என்பது, அவரை வாசித்தவரையில் நான் கண்ட ஒன்று. உண்மையில் எந்த ஓர் ஆளுமையுடன் பழகிய ஒருவரும், அவருடையை ஆளுமையைத் தங்களது தனிப்பட்ட அனுபவத்தின் மூலமும் எடையிட முயல்வார்கள் என்பது தெரிந்ததுதான். இதில் சில பயன்களும், பல பிரச்சினைகளும் உள்ளன.

பெரும்பாலும் பலர் தங்களது தனிப்பட்ட பழக்கத்தின் மூலமாக மட்டுமே அந்த ஆளுமையின் ஒட்டுமொத்த பங்களிப்பையும் அளப்பார்கள். இப்படி இல்லாமல் இருந்தால் அது மிகப்பெரிய ஆச்சரியம் என்றே சொல்லவேண்டும். ஆனால் மலர்மன்னன் அத்தகைய ஆச்சரியத்தை நமக்கு அளிக்கவில்லை. நான் எதிர்பார்த்ததுபோலவே இப்புத்தகம் திமுக தோன்றிய வரலாற்றையும், அதன் அக்காலத்துத் தலைவர்களையும் அண்ணாவைப் பற்றிய தனிமனிதப் புகழுரைகளுடனும், பெரியாரைப் பற்றிய தனிமனித அரசியல் விமர்சனத்துடனும், பிராமணப் பார்வையிலும் அணுகுகின்றன. முரண் என்னவென்றால், இத்தகைய அணுகலே இப்புத்தகத்தை மிக முக்கியமானதாகவும், சுவாரஸ்யமானதாகவும் ஆக்குகிறது. ஏனென்றால், மலர்மன்னன் எங்கேயும் தனது சாய்வைக் கட்டுப்படுத்தவோ, நேராக்கவோ முயலவே இல்லை.

நான் இப்புத்தகத்தைப் படித்த சில நண்பர்களுடன் பேசினேன். அவர்கள், இப்புத்தகம் அப்படி பிராமணச் சார்புடன் அணுகவில்லை என்றார்கள். நான் மீண்டும் வாசித்துப் பார்த்தபோதும், மலர்மன்னன் திமுகவின் தோற்றத்தைப் பற்றிய விவரணைகளில் அப்படி ஒரு சிந்தனையுடன் அணுகியிருப்பதாகத்தான் தெரிகிறது. முக்கியமாக அவர் கூற வருவது, பிராமணர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை, திராவிட இயக்கத்தின் முன்னோடியான தென்னிந்திய மக்கள் சங்கத்தை ஆரம்பித்தவர்களே கைவிட்டுவிட்டார்கள் என்பதைத்தான். இச்சங்கத்தின் கொள்கைகள் முற்றிலும் பிராமணரல்லாதவர்கள் நலனைப் பற்றிப் பேசினாலும், ‘பிராமணர்களுக்குத் தங்கள் வலக்கரத்தினை நீட்டத் தயாராகவே இருப்பதாகச்’ சொன்னதை மலர்மன்னன் எடுத்துக்காட்டுகிறார். அப்படி வலக்கரத்தினை நீட்டுவது கூட, ‘பிற சாதிகளுக்கு பிராமணர்கள் செய்து வந்துள்ள கேடுகளுக்கு வருத்தம் தெரிவிப்பார்களேயானால்’ என்ற ஒரு கெடுவுடன் சொல்லப்படுகிறது. பிராமணர்களுக்கு வலக்கரம் நீட்டத் தயாராயிருக்கும் தென்னிந்திய மக்கள் சபையின் தீர்மானத்தைக் குறிப்பிடும் மலர்மன்னன் தொடர்ந்து பிராமணர் – பிராமணரல்லாத விஷயங்களைப் பற்றித் தெளிவாக, விரிவாகப் பேசுகிறார்.

ஒவ்வொரு சாதியும் தனக்கு மேலுள்ள சாதிக்கு நிகராக விழைய விரும்புவதைச் சொல்லும் மலர்மன்னன், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் பிராமணரல்லாதவர்களின் பட்டியலையும் தருகிறார். அதோடு பிராமணரல்லாதவர்களுக்கு பிராமணர்கள் இழைத்ததாகச் சொல்லப்படும் கொடுமைகளைப் பற்றிய விவரங்களை தென்னிந்திய மக்கள் சபை தரவில்லை என்கிறார். இவையெல்லாம் மிக முக்கியமான பதிவுகளாகும். இன்றைய நிலையில் பிராமண சார்புடன் எழுதுவது கீழாக நோக்கப்படும் நிலையில், மலர்மன்னனின் மிக நேரடியான மனப்பதிவும், அதன் மூலம் தென்னிந்திய மக்கள் சபை  திராவிட கழகம்  திமுக எனத் தொடரும் கட்சிகளின் மாற்றங்களைப் பற்றிய பதிவும், சமன் கொண்ட சமூகம் என்ற அளவில் மிகவும் தேவையானதாகிறது. அந்த வகையில் அவர் செய்திருப்பது, முற்றிலும் வேறு வகையிலான பதிவு. இந்தத் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இப்படி ஒரு கோணத்தில் திராவிட இயக்க வரலாற்றைப் படிப்பது முக்கியமானது, சமகாலத்தில் இதுவரை படித்திருக்க வாய்ப்பில்லாதது.

அடுத்து இப்புத்தகம் அண்ணாவையும் பெரியாரையும் பல விதங்களில் அணுகுகிறது. திமுக உருவானதற்கு மூன்று முக்கியக் காரணங்களை முதலிலேயே சொல்லிவிடும் மலர்மன்னன் அதன் ஒவ்வொன்றுள்ளேயேயும் சென்று அலசுகிறார். கருத்து வேறுபாடா, பதவி சுக ஆசையா, வாரிசுரிமைத் தகராறா என்று மூன்று விதங்களில் ஆராய்கிறார் மலர்மன்னன். எல்லாவற்றுள்ளேயும் கருத்து வேறுபாடே முதன்மையாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது. அதாவது கருத்து வேறுபாட்டின் தொடர்ச்சியாகவே மற்ற விஷயங்கள் அமைந்துவிடுகின்றன. ஆனால் இந்தக் கருத்துவேறுபாட்டை மலர்மன்னன் அணுகும் விதம்தான் சாய்வுடையதாக இருக்கிறது. அந்தச் சாய்வை அவர் மறைக்கவும் முயல்வதில்லை. பெரியாரின் பிரத்யேகத் தனிப்பட்ட குணங்களைச் சொல்லி, அதன் வழியே பெரியாரை அடக்கப் பார்க்கும் மலர்மன்னன், அதையே அண்ணாவுக்கு நேர்நிலையாகச் செய்துவிடுகிறார். அண்ணா எழுதிய கட்டுரைகளுக்கெல்லாம் மிக நேர்நிலையான காரண காரியங்களைத் தொகுக்கும் மலர்மன்னன், பெரியாரின் கருத்துகளுக்கெல்லாம் அவரது பக்குவமற்ற தன்னாளுமையே காரணம் என்று சொல்லிவிடுகிறார்.

ஒரு நிலையிலிருந்து பெரியார் இன்னொரு நிலைக்கு மாறும்போது, அதுவும் தனிமனிதரின் மீதான எண்ண மாற்றத்தைக்கூட கேள்வி எழுப்பும் மலர்மன்னன் (ராஜா அண்ணாமலை செட்டியார் குறித்த தலையங்கம் ஓர் உதாரணம்), அதே செயலை அண்ணா செய்யும்போது, அதுவும் முக்கியமான கொள்கை மாற்றம் குறித்ததை (ஆகஸ்ட் 15 திராவிடர்களும் கொண்டாடும் நாள் என்று திடீரென்று அண்ணா சொன்னது) விமர்சிக்காமல், மிக நீண்ட மொழிகளில், எடுத்துக்காட்டுகளில் அதைப் பூசி மெழுகப் பார்க்கிறார். இப்படியே இப்புத்தகம் முழுக்க அண்ணா பற்றிய மிக மிஞ்சிய சித்திரத்தை உருவாக்க முனைந்திருக்கிறார். அண்ணாவின் எழுத்துகளை எடுத்தாளும்போது, அதில் வரும் ஆரிய, பார்ப்பன விஷயங்கள் குறித்த எவ்விதக் கருத்தையும், விமர்சனத்தையும் மலர்மன்னன் முன்வைக்கவில்லை என்பது வினோதமானது. அவரது அண்ணா பாசம் அவரையும் திராவிடப் பாதையில் அழைத்துச் செல்லும் வினோதமே அது.

அதேபோல் தனிப்பட்ட சில குணநலங்களாக ஒன்றைச் சொல்லி அதன்வழியே பெரியார் அண்ணா போன்ற ஆளுமைகளின் சித்திரத்தை வரையறுக்க முயல்வது முதிர்ச்சியான அணுகுமுறை என்று எனக்குத் தோன்றவில்லை. இப்புத்தகம் முழுக்க பல வகைகளில் அது செய்யப்பட்டிருக்கிறது. ஒருவகையில் தன் மனத்தில் உள்ளவற்றை எவ்வித ஒளிவுமறைவுமில்லாமல் மலர்மன்னன் முன்வைத்திருக்கிறார் என்றாலும், இத்தகைய அணுகுமுறையை வைத்துக்கொண்டு அவர் உருவாக்கும் சித்திரத்தை அப்படியே ஏற்றுக்கொண்டுவிட முடியாது. பாரதியைப் பற்றிச் செல்லம்மாள் சொன்ன சித்திரத்தைக்கூட, ‘நூறு சதவீதம் உண்மையாக இருக்குமா’ என்று யோசித்துக்கொண்டே படித்த எனக்கு, மலர்மன்னனின் அணுகுமுறையில் அதைவிட ஆயிரம் மடங்கு சந்தேகம் உண்டாகிவிட்டிருந்தது.

திராவிட இயக்கத்தின் சிந்தனையோடும் செயல்பாட்டோடும் பொருந்திப் போகமுடியாத எனக்கு, பெரியாரை சகட்டுமேனிக்கு விமர்சிக்கும் மகிழ்ச்சியான இழைக்குள்ளும், அண்ணாவை புனித பிம்பமாக்கும் சோகமான இழைக்குள்ளும் சிக்கி சிக்கி வெளிவந்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. 🙂

கருப்புச்சட்டை குறித்த அத்தியாயங்கள் இரண்டு ஈகோக்கள் மோதிக்கொள்ளும் காட்சிகளை நாடகத்தன்மையுடன் முன்வைத்தன. அண்ணாவும் பெரியாருக்கு எவ்விதத்திலும் சளைத்தவரல்ல என்பதை இந்தக் கருப்புச்சட்டை விஷயத்தில் காணமுடிந்தது. கன்வென்ஷன் அல்ல கம்பல்ஷன் என்று சொல்லும் அண்ணா, ஒரு கட்சியில் கட்டுக்கோப்பு என்பதே கம்பல்ஷனில்தான் இருக்கிறது என்பதை மிக வசதியாக மறந்துவிடுகிறார். பிராமண எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, தனிநாடு என எதுவுமே கம்பல்ஷனல்ல என்று அண்ணா அன்றே சொல்லியிருந்தால், நாம் காங்கிரஸோடு சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கலாம்! அதையே பெரியார் சொல்லும்போது, அண்ணாவுக்கு ஆதரவாகப் பேசத் தொடங்குகிறார் மலர்மன்னன்! எவ்வித இன, மத, சாதிக் கோட்பாடுகளுக்குள் சிக்கிக்கொண்டுவிட்டாலும், அங்கே கம்பல்ஷன் என்பது இருந்தே தீரும் என்பது குறித்து அண்ணாவுக்குச் சந்தேகங்கள் இருந்தாலும், மலர்மன்னனுக்கு இருந்திருக்காது என்றே உறுதியாக நம்புகிறேன்.

இன்னொரு முக்கியமான விஷயம், இன்றைய நிலையில் திராவிட முன்னேற்றக் கழக அரசியலின் மீதுள்ள வெறுப்பை மலர்மன்னன் மிக எளிதாக வெளியிடுகிறார். புறக்கணிப்பு என்னும் ஆயுதமே அவர் அதற்கு எடுத்துக்கொண்டிருப்பது என்று தோன்றுகிறது. வெளிப்படையாக அவர் இதை மறுக்கக்கூடும். கருணாநிதி பற்றி ஒரேயோர் இடத்தில் மட்டுமே குறிப்பிடப்படுகிறது இப்புத்தகத்தில். அதுவும் மிகச் சாதாரண விஷயமொன்றில், அதுவும் எதிர்மறையாக. மணியம்மையின் கல்யாணத்தை வைத்துப் பேசும் இடங்களிலெல்லாம், வாரிசுரிமையைப் பற்றி அண்ணாவின் கருத்துகளைப் படிக்கும்போதெல்லாம் அது கருணாநிதிக்கென்றே சொல்லப்பட்டது போல இருக்கிறது. இதற்காக உழைத்து மலர்மன்னன் இக்கருத்துகளைத் தேடி எடுத்தாரோ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது.

அண்ணா பெரியாரை உருவகித்து எழுதிய கதையான ‘ராஜபார்ட் ரங்கதுரை’யை இன்றைய நிலையில் ஒரு திமுகவின் தொண்டன் எழுதினால் அது எப்படி கருணாநிதிக்கும் பொருந்திப் போகும் என்று யோசித்துப் பார்த்தேன். திமுக குறித்த ஞாநியின் பகிரங்கக் கடிதம்தான் ஞாபகத்துக்கு வந்தது!

இன்னும் இப்புத்தகத்தில் மேம்படுத்தப்படவேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. எது ஆசிரியர் சொல்வது, எது எடுத்தாளப்பட்டவை என்பது குறித்த தெளிவான வேறுபாடுகள் இப்புத்தகத்தில் இல்லை. இது பெரும் தடையாக உள்ளது. இது உடனடியாகக் களையப்படவேண்டிய ஒன்று. சில இடங்களில் மலர்மன்னன் என்ன சொல்ல வருகிறார் என்பது சட்டெனப் புரிவதில்லை. (ஓரிடத்தில் மலர்மன்னன், பெரியார் என்ன சொல்வருகிறார் என்பதே எளிதில் புரியாது என்கிறார்!) அதையும் சரி செய்யவேண்டும்.

இவை எல்லாவற்றையும் விட்டுவிட்டு சில விஷயங்களை யோசித்தால் சுவாரஸ்யமான காட்சிகள் மனதுள் விரிகின்றன.

ராபின்சன் பூங்காவில் மிக உணர்ச்சிகரமாகத் தோன்றிய இன்றைய திமுகவின் நிலை குறித்த சித்திரம் ஒன்று. இது எந்த இயக்கத்துக்கும் நேரக்கூடியதே. இன்றைய காங்கிரஸின் நிலையைக் கூட நாம் நினைத்துக்கொள்ளலாம். ஆனாலும் ஓர் உணர்ச்சிகரமான கட்சியின் தோல்வி பற்றிய சிதிலடமைந்த சித்திரமே மனதில் வருகிறது.

இன்னொன்று இன்னும் சுவாரஸ்யமானது. கருணாநிதியின் இன்றைய ஆளுமையில் ஒளிந்துகொண்டிருப்பது, அவரே அடிக்கடிச் சொல்வது போல, பெரியாரும் அண்ணாவும்தான். பெரியாரைப் போலவே தடாலடியாக எதையாவது சொல்வதிலும், அண்ணாவைப் போலவே சாமர்த்தியமாக அதை மறைப்பதிலும் கருணாநிதி இருவரையும் சமமாகப் பெற்றிருக்கிறார். அண்ணாவின் மறுமொழிகளையெல்லாம் பார்த்தால், இன்று கருணாநிதி எழுதுவது போலவே இருக்கிறது. அண்ணா ஆகஸ்ட் 15ஐ திராவிடர்கள் கொண்டாடலாம் என்று சொல்லி எழுதும் கடிதத்தில் அச்சு அசல் கருணாநிதியை நாம் காணலாம். அண்ணா தன்னை கட்சியை விட்டு பெரியார் நீக்கினாலும் கவலையில்லை என்கிறார் கருணாநிதியைப் போலவே. பெரியார் பதிலுக்கு கண்ணீர்த் துளிகள் என்று எழுதுகிறார், அதுவும் கருணாநிதியைப் போலவே!

கடைசியாக ஒன்றையும் சொல்லிவிடவேண்டும். மலர்மன்னன் கருணாநிதியைப் பற்றி இப்புத்தகத்தில் குறிப்பிடாதது அவரை ஒதுக்கவேண்டும் என்ற எண்ணத்தினால் மட்டும்தான் இருக்கும் என்று உறுதியாகச் சொல்லிவிடமுடியாது. அப்படியும் இருக்கலாம் என்று வேண்டுமானால் சொல்லலாம். உண்மையில் ஒரு கட்சி உருவாகும்போது அதில் பங்கெடுத்தவரே அக்கட்சியில் தலைவராக ஆகவேண்டும் என்கிற கருத்து அவசியமில்லாதது. பின்வழியாக வந்தவர் என்பதெல்லாம் இன்றைய பரபரப்பு அரசியலுக்குத் தேவையானதாக இருக்கலாமே ஒழிய அதில் எவ்வித முக்கியத்துவமும் இல்லை. அதையும் மீறி கருணாநிதி இன்றைய திமுகவின் தலைவராகவும், ஆட்சிக்கட்டிலில் இருப்பதுவுமே அவரது சாதனை. சுத்தமாக இது எனக்குப் பிடிக்கவில்லை என்றாலும், இது சாதனைதான்!

ஹரன்பிரசன்னா

Reviews

There are no reviews yet.

Be the first to review “திமுக உருவானது ஏன்?”

Your email address will not be published. Required fields are marked *

Information
About Us
Frequnetly Asked Questions
International Shipping
Newsletter
Payment Options
Shipping & Returns
Privacy Policy
Terms & Conditions
Cancellation & Return Policy
How To Track My Order
Customer Service
Contact Us
Returns
My Account
My Account
Order History
Wish List
Newsletter
எமது முகவரி:
தடாகமலர் பதிப்பகம்,
No. 105, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை,
(திருவல்லிக்கேணி தபால் நிலையம் அருகில்)
திருவல்லிக்கேணி,
சென்னை - 600 005

தொலைபேசி எண் : +91 97909 24629

மின்னஞ்சல் முகவரி : sales@thadagamalar.com