வேதத்தில் பசு

பிப சோமமபி யமுகஹர தர்தா உர்வம்
கஹவ்யம் மஹி கஹர்நநை இந்திரா|
வி யோ தர்சஸ்னோ வதிசோ வஜ்ரஹஸ்தா விஸ்வா வ்ருட்ரமமிதிரியா
சவோபிஹி||

சோமத்தை குடி! சோம்பேறியை சுத்தமாக்கு! உன்னை கெளரவிக்கும்போது அதிபுத்திசாலி களாகிய அறிஞர்கள் இவ்வுலகை ஒளிமிக்கதாக்குகிறார்கள், இந்திரனே! எப்படி யக்ஞத்தின் நெருப்பை மரங்கள் ஒளிபெறச்செய்கின்றனவோ அப்படி

#பசுரக்ஷணம்

க்ருதம் துஹானாமதிதிம் ஜனாயாக்நே மா ஹிம்சிஹி:

யஜுர் வேதம் – 13.49

“பாதுக்காக்கப் படவேண்டிய பசுக்களையும் காளைகளையும் கொல்லாதீர்!”

பிதரம் மாதரம் ச   (அதர்வ வேதம் – 6.140.2)

“ஏ பற்களே! நீங்கள் அரிசியை, வாற்கோதுமையை, பருப்பு வகைகளை, எள்ளை உண்கிறீர்கள். இவைகளே உமக்காக ஏற்பட்டவை. தாய் தந்தையராக முடியும் எதையும் கொல்லாதீர்கள்”

சூயவஸாத் பகவதீ ஹி பூயா அதோ வயம் பக்வந்த: ஸ்யாம
அத்தி த்ர்நாமாக்ன்யே விஷ்வதாநீம் பிப ஷுத்தமுதகமாசரந்தீ

ரிக் வேதம் 1.164.40 / அதர்வ வேதம் 7.73.11 / அதர்வ வேதம் 9.10.20

அக்ன்ய பசுக்கள் – இவைகளை எக்காரணம் கொண்டும் கொல்லக்கூடாது . அவை தாங்களே தங்களை சுத்த ஜலம், பச்சைப் புற்களை உண்டு ஆரோக்கியமாக்கிக் கொள்ளும், இதன் மூலம் நாம் நற்பண்புகள், ஞானம் மற்றும் செல்வம் படைத்தவர்களாவோம்.

அக்ன்யேயம் சா வர்ததம் மஹதே செளபாகாய   (ரிக் வேதம் – 1.164.27)

“பசு – அக்ன்ய – நமக்கு ஆரோக்கியமும் வளமும் கொணர்கிறது”

சுப்ரபாணாம் பவத்வக்ந்யாயா:   (ரிக்வேதம் – 5.83.8)

“அக்ன்ய பசுவிற்கு சுத்த ஜலம் கிடைக்க மிகச் சிறந்த வசதி செய்யப்பட்டிருக்க வேண்டும்”

விமுச்யத்வமக்ஹ்ன்யா தேவயாநா அகன்மா (யஜுர் வேதம் 12.73)

“அக்ன்ய பசுக்கள் மற்றும் காளைகள் உனக்கு வளங்களைக் கொணர்பவை”

இமம் ம ஹிம்சிரேகாஷஃபம் பஷும் கனிக்ரதம் வாஜிநாம் வாஜிநேஷு   (யஜுர் வேதம் – 13.48)

“மற்ற பெரும்பாலான அனைத்து மிருகங்களையும் விட அதி விரைவாக ஓடும் ஓர் குளம்பினால் ஆன கனைக்கும் இம்மிருகத்தை வதைக்காதீர்!”

மா காமனாகாமாதிதிம் வதிஷ்டா   (ரிக் வேதம் 8.101.15)

“பசுக்களை கொல்லாதீர். பசு ஒரு வெகுளி மற்றும் அதிதி – அதாவது துண்டு துண்டாக வெட்டப் படக்கூடாதது”

வத்ஸம் ஜாதமிவாக்ன்யா  (அதர்வ வேதம் – 3.30.1)

பிறரைக் கொல்லப் படக்கூடாத ஆக்ன்யப் பசு தன் கன்றுகளை எவ்வாறு நேசிக்குமோ அவ்வாறு நேசியுங்கள்

தேனு சதனம் ரயீநாம் (அதர்வ வேதம் – 11.1.34)

பசுவே அனைத்து வளங்களுக்கும் ஆதாரமாம்

இவ்வாறெல்லாம் பசுவை ஹிம்சிக்க கூடாது, அவை நமது செல்வம் என கூறும் வேதவசனங்கள் பலஉள்ளன. மேலும் ரிக் வேதத்தின் 28ஆம் ஸூக்தம் அல்லது 6வது மணடல ஸ்லோகம் பசுவின் பெருமையை செம்மையாக எடுத்தியும்புகிறது.

ஆ காவோ அக்னமன்னுத பத்ரமக்ரந்த்சீதந்து
ஃபூயோ ஃபூயோ ரயிமிதஸ்ய வர்தயன்னபின்னே
ந தா நஷந்தி ந பதந்தி தஸ்கரோ நாசாமமித்ரோ வ்யதிரா ததர்ஷதி
காவோ பகோ காவ இந்த்ரோ மே அச்சான்
யூயம் காவோ மேதயதா
மா வ ஸ்தேநா ஈஷத மாகன்ஷ:

அனைவரும் பசுக்களை தொந்தரவுகளிலிருந்து காத்து ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும்.
பசுக்களைப் பராமரிப்பவரைக் கடவுள் ஆசிர்வதிக்கிறார்.
பகைவரேயானாலும் பசுக்களின் மீது எந்த ஆயுதப் பிரயோகமும் செய்யலாகாது.
பசு வதை யாரும் செய்யக் கூடாது.
பசு வளமையும் வலிமையும் கொணர்கிறது.
பசுக்கள் ஆரோக்யமாகவும் மகிழ்வுடனுமிருந்தால் ஆண்-பெண்களும் வியாதிகளற்று வளம் பெறுவர்.
பசுக்கள் சுத்தமான் தண்ணீரைப் பருகியும் பச்சைப் புல்லைப் புசித்துமிருக்கட்டும். அவைகளைக் கொல்ல வேண்டா, அவை நமக்கு வளத்தையளிப்பவை.

இவ்விதம் பசுவின் பெருமையை எடுத்தியம்பி அவற்றை பாதுகாப்பது நம் கடமையென வலியுறுத்தும் அதே வேதம் பசுவை ஹிம்சித்து உண்ணும் மிலேச்சர்களின் மீது தீவிரமாக பாய்கிறது.

யா ஆமம் மான்ஸமதந்தி பௌருஷேயம் ச யே க்ரவீ:

கர்பான் காதந்தி கேஷவாச்டாநிதோ நாஷயாமசி   (அதர்வ வேதம் – 8.6.23)

“பசு இறைச்சி, பச்சை இறைச்சி, ஆண்-பெண் பாலர்களின் அழிவினால் ஏற்பட்ட இறைச்சி, இவைகளை உண்பவர்களை தண்டிக்க வேண்டும்”

ஆரே கோஹா ந்ருஹா வதோ வோ அஸ்து   (ரிக் வேதம் – 7.56.17)

“ரிக்வேதத்தில் பசுவதை என்பது மாபாதகம் என்றும் மனிதரைக் கொல்வதற்குச் சமம் என்றும் கூறப்படுகிறது. இத்தகைய கொடுஞ்செயலைச் செய்தவர் தண்டிக்கப்பட வேண்டுமென்றும் கூறுகிறது”

யஹ் பெளருஷேயேன க்ரவிஷா சமன்க்தே யோ அஷ்வேன பஷுநா யாதுதானா:
யோ அக்ன்யாயா பரதி க்ஷீரமாக்நே தேஷாம் ஷீர்ஷானி ஹரசாபி வ்ரிஷ்சா  (ரிக் வேதம் – 10.87.16)

“மனித, குதிரை அல்லது பசு, காளை சதைகளைப் புசிப்பவர், அக்ன்யப் பசுக்களைக் கொல்பவர் இவர்களை கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.”

அந்தகாய கோஹாதம்  (யஜுர் வேதம் – 30.18)

“பசுவதை செய்பவர்களை அழி!”

யதி நோ காம் ஹன்சி யத்யஷ்வம் யதி பூருஷம்
தம் த்வா சீசேனா வித்யாமோ யதா நோ சோ அவீரஹ  (அதர்வ வேதம் – 1.16.4)

“யாரேனும் உங்களின் பசுக்கள், குதிரைகள் அல்லது மக்களை அழிப்பாராயின், அவர்களை ஈயக் குண்டினால் கொன்று விடுங்கள்”

யஜுர் வேதத் தொடக்கத்தில், “தர்சபூர்ணமாஸம்” எனப்படும் யாகத்திற்கான மந்திரங்கள் ஓதப்படுகின்றன. அவற்றுள் “தர்சயாகம் ” பற்றியுளது, இங்குப் பசுக்களை “அக்னியா” என்னும்பெயரால் வேதம்வழங்குகிறது. “கொல்லத் தகாதவை” என்பதே இச்சொல்லின்பொருள்.

பசுவிற்குப் பலபெயர்கள் வேதங்களில் கூறப்படுகின்றன. அவற்றுள் “அக்னியா” என்னும் பெயர் முதலிடம் பெறுகிறது.

“ந ஹிம்ஸ்யாத் ஸர்வ பூதானி”

எந்தப் பிராணிகளையும் கொல்லக்கூடாது என்றுகூறும் வேதவாக்யம், “ஜீவ ஹிம்ஸையை அறவே ஒழிக்க வேண்டும்” என வலியுறுத்துகிறது.

இப்பொதுவிதியே இருக்கும்போது, சிறப்பாக ஒரு பிராணியைக் “கொல்லத்தகாதது” என்று பெயரிட்டழைப்பதிலிருந்து வேதத்தின் உட்கருத்து நன்கு விளங்குகிறதே. மற்றப்பிராணிகளைக் கொல்லுவதால் உண்டாகும் பாவத்தைப்போல பன்மடங்கு அதிகமான பாவம் பசுவதையால் உண்டாகும். அதனால் இக்காரியம் செய்தல்கூடாது என்பது வேதத்தின் கருத்து.

இன்னுமொரு மந்திரம்…

ஸூயவஸாத் பகவதீ ஹி பூயா அதோ வயம் பகவந்த: ஸ்யாம
அத்தி த்ருணமகன்யே விஸ்வதானி பிப ஸுத்தமுதகமாசரந்தீ

ஏ அக்னியே(கொல்லத்தகாத பசுவே) நீ சுவைமிக்க புல்லைத் தின்பாயாக. அதனால் பால் நிறையப் பெறுவாய். பிறகு நாங்களும் செல்வந்தர்களாவோம். நீ எக்காலமும் உன்னிஷ்டம்போல் திரிந்து கொண்டு வேண்டிய அளவு புற்களைத் தின்னவேண்டும். தூய்மையான நீரையும் குடிக்கவேண்டும். என்பது இம் மந்திரக்கருத்து.

மாதா ருத்ராணாம் துஹிதா வஸூனாம் ஸ்வாஸாதிதியானாமம்ருதஸ்ய
நாபி:
ப்ர நு வோசம் சிகிதுஷே ஜனாய மா காமனாகாமதிதிம் வதிஷ்ட

“இப்பசு ருத்திரர்களுக்கெல்லாம் தாய். வஸுக்களின் பெண். ஆதித்யர்களின் தங்கை. அமுதத்தின் இருப்பிடம். அறிவுள்ளவனுக்குச்சொல்கிறேன், குற்றமற்றதும் பெருந்தன்மை யுள்ளதுமான பசுவைக் கொல்லாதீர்கள். எத்தகு புனிதமானதுபசுத்தாய். அறிவாளர்கள் அறிக. முட்டாள்களுக்குப் புரிய உணர்த்துக என்கிறது வேதம்.

மேலும் நம் நாட்டின் வணங்கப்படும் முக்கியமான தெய்வங்களெல்லாம் பசுக்களின் பின்னேசெல்பவையாக உள்ளன.குன்றெடுத்தானிரைகாத்து மாடுமேய்க்கும் கண்ணா…..பசுபதி
தத்தாத்ரேயர் இப்படி எத்தனை எத்தனையோ….

தழைகளும் தொங்கலும் பாசுரத்தில் நம்மாழ்வார். வைகுந்தத்திலும்கூட உனக்குப் பசு மேய்ப்பதே இனிதாக இருப்பதே என்றுபுகழ்கிறார்.

பசுவைக்கொல்லாதே என்று முழங்கும் வேதம், அதை வணங்குவதற்கும் ஒரு மந்திரத்தைச்சொல்லிவைத்திருக்கிறது.

நமஸ்தே ஜாயமானாயை நமஸ்தே ஜாதாயா உத தே நம:

பாலேப்ய: ஸாபேப்யோ ரூபாயாகன்யே தே நம:

பசுவைப் போற்றுவோம். வாழ்க கோ மாதா.

இன்னும் நிராலம்ப, சாண்டில்ய உபநிஷதம் புலால் மறுத்தல் பற்றி அதிகமாக கூறுகிறது. அவை கிடக்க சனாதனவாதிகள் போற்றும் தமிழ்நூல்களிலும் காணுவோம்

சைவர்கள் பெரிதும் போற்றும் திருமந்திரம் புலால் மறுத்தலை கூறுகிறது.

திருமந்திரம் – முதல் தந்திரம்):

‘பற்றாய நற்குரு பூசைக்கும் பன்மலர்

மற்றோர் அணுக்களைக் கொல்லாமை ஒண்மலர்

நற்றார் நடுக்கற்ற தீபமும் சித்தமும்

உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே’

ஒப்பற்ற ஞானகுருவாக விளங்கும் சிவபெருமானுடைய பூஜைக்கு உகந்த பல மலர்களுள் முதன்மையானது கொல்லாமை எனும் மலர்என்று குறிக்கிறார் திருமூலர்.

பூஜையினை ஏற்க எழுந்தருளும் பரமன் தன் திருமுன்பு இடப்படும் மலர்களுள் ‘கொல்லாமை’ எனும் மலரை மிகவும் ஆவலுடன்தேடுகிறான். அது இல்லாது போயின் பூஜையினை ஏற்காதுவிலகிச் செல்கிறான்.

புலால் மறுத்தல் (திருமந்திரம் – முதல் தந்திரம்):

‘பொல்லாப் புலாலை நுகரும் புலையரை

எல்லாரும் காண இயமன் தன் தூதுவர்

செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தில்

மல்லாக்கத் தள்ளி மறித்து வைப்பாரே!!’

பிற உயிர்களின் பரிதாபக் கதறலில் இருந்து தோன்றும் மாமிசத்தை ‘பொல்லாப் புலால்’ என்று குறிக்கிறார் திருமூலர்.

‘தன் பொருட்டு பிராணிகள் துடிதுடித்து உயிர் இழப்பதைப் பற்றி சிறிதும் வருத்தம் இன்றி புலால் உட்கொள்வோரை நரகத்தில் யம தூதுவர்கள் சிறிதும் இரக்கம் காட்டாது நெருப்பில் புரட்டி எடுப்பர்’ என்று ஐயம் திரிபற அறம் உணர்த்துகிறார் திருமூலர்.

கொல்லாமை (திருமந்திரம் – முதல் தந்திரம்):

‘கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை

வல்லடிக்காரர் வலிக்கயிற்றால் கட்டிச்

செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடை

நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே’

கொல் -குத்து,வெட்டு என்று பிற உயிர்களின் துன்பத்தைக் கருத்தில் கொள்ளாது இருப்போரை ‘மாக்கள்’ என்று கடுமையாய்ச் சாடுகிறார் திருமூலர்.

இச்செயல் புரிபவர்கள் மிகக் கடுமையான முறையில் நரகத்தில்இடப்படுவர் என்று அறுதியிட்டுக் கூறுகிறார் (பரிபூரண சிவ ஞானம் கைவரப் பெற்ற) திருமூலர்.

தவிற தமிழாகமம் எனகூறப்படும் சிவதருமோத்திரம்

காய்ந்த மன்னன் கடிய வினையினைத்
தீர்ந்து சேர்வன் சிவபுரம் திண்ணமே
ஒர்ந்து ஒறுப்பவர் தம்மை ஒறா மன்னன்
கூர்ந்த தீ நிரயக் குழி கூடுவன் (சிவதருமோத்தரம் 1145)

பொருள் : எருது,பசுக்களை கொடுமை செய்தவர்களைத் தண்டித்த அரசன் ,கடுமையான தீவினைகளிலிருந்து விடுபட்டு உறுதியான சிவலோகத்தை அடைவான்..அப்பசு எருதுகளை கொடுமை செய்தவர்களை தண்டிக்காத அரசன்,மிகுந்த எரியும் நரகை அடைவான்
என்கிறது.

வைணவ ஆழ்வார் பாசுரங்களில் பலவிடம் பேசப்பட்ட இவ்விஷயத்தை சுருக்கமாக திருவாய்மொழியை காணலாம்.

‘கொன்று உயிருண்ணுமஎ விசாதி பகை பசி தீயன எல்லாம் நின்று இவ்வுலகில் கடிவான் நேமிப்ரான் தமர்போந்தார்’  என்கிறது.

மற்றும் பஞ்சமா பாவங்களுள் புலால் உண்ணதலும் உண்டு.

புறநானூறு 9ஆம் பாடல் பின்வருமாறு கூறுகிறது.

“ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும் பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித் தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும் பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும் எம் அம்பு கடிவிடுதும் நும்அரண் சேர்மின்”

பொருள்- பசு இனமும், பசு இனம் போன்ற இயல்புடைய அந்தணரும், பெண்களும் நோயாளிகளும், நீத்தார் கடன் செய்ய பொன் போன்ற பிள்ளைகளைப் பெறாதவர்களும், பாதுகாப்பான இடத்திற்கு செல்லுங்கள் எம்முடைய அம்பை விரைந்து செலுத்தப் போகிறோம் எனவே நல்ல பாதுகாப்பான இடத்திற்கு உடனடியாகத் தானே சென்று விடுங்கள் என்று அறநெறியில் நடக்கும் பாண்டியன் பால்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியின் போர்க்கால செயலை வாழ்த்தி “நெட்டிமையார்” என்னும் புலவர் பாடுகிறார்.

இரு அரசர்களுக்கு இடையே போர் நடக்கும் போது பார்ப்பனர்களும், பெண்களும் நோயாளிகளும், பிள்ளையில்லாதவர்களும் அரசனின் அறிவிப்பு கேட்டு பாதுகாப்பான இடத்திற்கு சென்றுவிடலாம் ஆனால் பசுக்கள் எப்படி அறிவிப்பை அறியவும் பாதுகாப்பான இடத்திற்கும் செல்லவும் முடியும். எனவே பசுக்களை பாதுகாக்கவே ஒரு முறை கையாளப்பட்டது.
போர் ஆரம்பிக்க நினைக்கும் மன்னன் தன் எதிரி நாட்டினில் எல்லையில் உள்ள பசுமாடுகளை பிடித்து வருவார்கள் இதற்கு பெயர் “ஆநிறை கவர்தல்”, இதனை “வெட்சித்திணை” என்றும், இதனை அறத்திற்கு உட்பட்ட செயல் என்றும் பதிவு செய்கின்றனர் சங்க புலவர்கள். போர் துவங்குவதற்க்கு அறிவிப்பாக பசு பிடித்து வருவது உள்ளது. இடையர் ஜாதி மக்கள் தங்கள் பசுக்கள் கவர்ந்து செல்லப்பட்டதை அரசனிடம் கூற பசுக்களை மீட்டு வர வீரர்கள் “கரந்தை மாலையை” அணிந்துகொண்டு செல்வதை “கரந்தைத்திணை” என்கிறது தமிழ் இலக்கியம்.

மட்டும் தமிழ் அறநூல்களில் ஒன்றும் திருக்குறளும் புலால்மறுத்தலை பற்றி கூறுகிறது என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை. பதிணென்கீழ்கனுக்கு நூல் ‘ஊனைத்தின்று ஊனைப்பெருக்குதல் முன்னின்னா” என்று புலால் மறுக்கிறது. தமிழ்கிழவி எனும் ஒளவையாரும் ‘புலையும் கொலையும் களவும் தவிர்’ என்றார்.

ஐம்பெரும்காப்பியங்களில் ஒன்றான சீவகசிந்தாமணியில் 2927ல்

‘உற்றுயிர் ஒம்பித் தீந்தேன் ஊனொடு துறப்பின் யார்க்கும் மற்றுரை இல்லை மண்ணும் விண்ணும் நும்அடிய அன்றே’ என்கிறது.

ஒருவன் ஊன்தின்னமல் உயிர்களை ஒம்பிவரின் அவனை வானும் வையமும் வணங்கிவரும் என இது உணர்த்தியுள்ளது.

ஊன்சுவைத்து உடம்பு வீக்கி நரகத்தில் உறைதல் கன்ருே? ஊன்தினது உடம்பு வாட்டித் தேவராய் உறைதல் நன்ருே? ஊன்றி இவ் விரண்டி அனுள்ளும் உறுதிநீ உரைத்திடு என்ன ஊன்தினது ஒழிந்து புத்தேள் ஆவதே உறுதி என்ரு

பதிணென் கீழ்கணக்கு நூல்களுள் ஒன்றான நாலடியார்

’துக்கத்துள் தூங்கித் துறவிண்கண் சேர்கலா மக்கட் பிணத்த சுடுகாடு- தொக்க விலங்கிற்கும் புள்ளிற்கும் காடே புலங்கெட்ட புல்லறிவாளர் வயிறு’ என திட்டி தீர்த்தார்.

ஊன் உண்டு உயிர்கட்கு அருளுடையேம் என்பானும், தானுடம்பா டின்றி வினேயாக்கும் என்பானும், காமுறும் வேள்வியில் கொல் வானும் இம்மூவர் தாம்அறிவர் தாங்கண்ட வாஅ.” (திரிகடுகம், 56) ஊனே உ ண் ப வ ர் அருளுடையேம் என்.று சொல்வது அறிஞர் இகழ்ந்து சிரித்தற்கு இடமாய் கின்றது என இது குறித்திருக்கிறது. புலைப்புசிப்பு அருள்கெட்ட கொலேப்பழி யாம்; ஆகவே அதனை ஒழித்த பொழுதுதான் அருளை வளர்த்த படியாம். அருள் வர அவல மருள்கள் ஒழிக் து போகின்றன.

நாய்ஒத் துழல்வார்க்கு நாவளவே-போயிழிந்தால் இன்னது இனிதென்று அறியார் இதற்காக மன்னவன் இன்றல் வடு: (பாரதம்)

ஊன் இன்றலில் உள்ள ஊனங்களை எடுத்துக்காட்டி மான மனிதர் அதன் உண்ணலாகாது எனப் பெருந்தேவனர் இவ் வாறு அருளியுள்ளார்.

ஊன்ஊண் துறமின்! உயிர்க்கொலே நீங்குமின்’ (சிலப்பதிகாரம்)

“புலேயுள்ளி வாழ்தல் உயிர்க்கு இன்னு’ (இன்னாநாற்பது)

ஊன் உண்டல் செய்யாமை செல்சார் உயிர்க்கு” (நான்மணிக்கடிகை)

உடைகல மாக்கள் உயிர் உய்ந்து சிங்குடறின் அடுதொழில் ஒழிந்து அவர் ஆருயிர் ஒம்பி மூத்துவிளி மாஒழித்து எவ்வுயிர்மாட்டும் தீத்தி (மணிமேகலை 16)

கொன்று உண்பான் நாச்சாம்” (சிறுபஞ்சமூலம் 10)

அலைப்பான் பிறிதுயிரை ஆக்கலும் குற்றம்;
விலைப்பாவில் கொண்டுஊன் மிசைதலும் குற்றம், சொலற்பால அல்லாத சொல்லுதலும் குற்றம்; கொலைப்பாலும் குற்றமே (நான்மணிக்கடிகை)

இன்னும் தொடர்ந்து எழுதலாம். விரிவுபயத்தால் விடுகிறேன். இதிலிருந்து கிடைக்கக்கூடிய முடிவு யாதெனின் புலால் உண்பது எந்த ஒரு ஹிந்துவுக்குப் உகந்ததல்ல. அது பாரத, தமிழ் கலாசாரமும் இல்லை அதிலும் பசுமாமிசம் உண்ணலாம் என எந்த வேதநூலும் வலியுறுத்தவில்லை. ஆகையால் ஹிந்துவானவன் பசுமாமிசம் உண்ணுவது பெரும்பாவம். மற்றும் பசுவை ரக்ஷிப்பதே அவனது கடமை.

குறிப்பு- வேதத்தில் ‘மாம்ஸ’ என்ற பதத்தை மாமிசம் என்கின்றனர். உண்மையில் மாம்ஸ என்பது ஒரு பழச்சதை, கூழ் என்ற பொதுப் பெயருடன் விளங்குவது. மாமிசத்தை மான்ச என்று சமஸ்க்ருதத்தில் சொல்வது அது கூழாக, சதைப் பற்றாக இருப்பதாலேயே, சதைப்பற்றாக இருப்பவை எல்லாமே மான்ச என்ற பொருளாகாது. அதன் முழு வாக்கியத்தையும் முன்னும் பின்னும் சொல்லப் பட்டிருக்கும் ஸ்லோகங்களையும் வைத்துப் பார்த்தால் அதன் உண்மைப் பொருள் நன்கு புலப்படும்.

References :

1. Rigveda Bhashya – Commentary on Rigveda by Swami Dayanand Saraswati

2. Yajurveda Bhashya – Commentary on Yajurveda by Swami Dayanand Saraswati

3. No Beef in Vedas by BD Ukhul

4. Vedon ka Yatharth Swaroop (True nature of Vedas) by Pt Dharmadeva Vidyavachaspati

5. All 4 Veda Samhita by Pt Damodar Satvalekar

6. Pracheen Bharat me Gomamsa – Ek Sameeksha (Beef in Ancient India – an analysis) by Geeta Press, Gorakhpur

7. The Myth of Holy Cow – by DN Jha

8. Hymns of Atharvaveda – Griffith

9. Scared Books of the east – Max Muller

10. Rigveda translations by Williams/Jones

11. Sanskrit English Dictionary – Monier Williams

12. Commentary on Vedas by Dayanand Sansthan

13. Western Indologists – a study of motives by Pt Bhagvadutt

14. Satyarth Prakash by Swami Dayanand Saraswati

15. Introduction to Vedas by Swami Dayanand Saraswati

16. Cloud over understanding of Vedas by BD Ukhul

17. Shathpath Brahman

18. Nirukta – Yaska Acharya

19. Dhatupath – Panini

(பாஜகவின் மாநில செயலாளர் திரு.கே.டி.ராகவன் அவர்களுக்கு இலங்கை கொழும்பு நகரில் வாழும் வேத ஆராய்ச்சி செய்துவரும் ஒரு மாணவர் அனுப்பிய கட்டுரை இது. இந்த கட்டுரை கே.டி.ராகவன் அவர்களின் முகநூல் பதிவிலிருந்து பிரசுரிக்கப்பட்டுள்ளது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Information
About Us
Frequnetly Asked Questions
International Shipping
Newsletter
Payment Options
Shipping & Returns
Privacy Policy
Terms & Conditions
Cancellation & Return Policy
How To Track My Order
Customer Service
Contact Us
Returns
My Account
My Account
Order History
Wish List
Newsletter
எமது முகவரி:
தடாகமலர் பதிப்பகம்,
No. 105, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை,
(திருவல்லிக்கேணி தபால் நிலையம் அருகில்)
திருவல்லிக்கேணி,
சென்னை - 600 005

தொலைபேசி எண் : +91 97909 24629

மின்னஞ்சல் முகவரி : sales@thadagamalar.com