எம்ஜிஆர் என்கின்ற இந்து…! – 2

வீரமணி சொல்வது என்ன?

‘திராவிடர் கழகம் என்ற வேரில் இருந்து கிளர்ந்தெழுந்து ஆலமரமாக வளர்ந்தவர் எம்.ஜி.ஆர். திராவிட இயக்கத்தைச் சேர்ந்த அவரை அபகரிக்க ஆர்எஸ்எஸ் திட்டமிட்டதால் நாங்கள் முந்திக்கொண்டோம்’ என்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் வீரமணி பேசியிருக்கிறார்.

இதுவும் உண்மையா என்றால், இல்லை. எம்.ஜி.ஆர். அவர்கள் திராவிடர் கழகம் என்ற வேரில் இருந்து கிளர்ந்தெழுந்து வந்தவர் அல்லர். முதலில் எம்.ஜி.ஆர். அவர்கள் காங்கிரஸ்காரர். காங்கிரஸ் அறிவுறுத்தியபடி, கதர் ஆடையே உடுத்தி வந்தார்.

கருணாநிதி அவர்கள்கூட தன்னுடைய ‘நெஞ்சுக்கு நீதி’ நூலில் ‘கதர் உடையும் கழுத்தில் துளசி மணிமாலையும் துலங்கிடக் காட்சியளிக்கும் காந்தி பக்தரான எம்ஜிஆர் அவர்களுடன் எனக்குத் தொடர்பும் நட்பும் தோன்றிய காலம் அதுதான். அண்ணாவின் நூல்களை அவருக்கு நான் கொடுப்பேன். காந்தியின் நூல்களை அவர் எனக்குக் கொடுப்பார். எங்களுக் கிடையே அடிக்கடி விவாதங்கள் நடைபெறும்.’ என்று எம்ஜிஆர் அவர்களை காங்கிரஸ்காரர் என்றே அறிமுகப்படுத்துகிறார்.

சில ஆண்டுகளுக்குப் பின்னர் காங்கிரசிலிருந்து பிரிந்தார் எம்ஜிஆர். நேதாஜி – பட்டாபி சீதாராமையாவுக்கும் காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டி ஏற்பட்டபோது நேதாஜி வெற்றிபெற்றார். பட்டாபி சீதாராமையாவின் தோல்வி எனது தோல்வி என்று காந்திஜி சொல்லியிருந்ததை எம்ஜிஆரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ‘மகாத்மாவின் மனத்தில்கூடத் தனக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்ற எண்ணத்திற்கு இடமிருக்கிறதே! மகாத்மாவைப் பற்றி விமர்சனம் செய்ய எனக்கு அருகதை கிஞ்சிற்றும் இல்லை என்பதை உண்மையாக இப்போதும் உணர்ந்தவனே. ஆனாலும் அவர் மீது நான் வைத்திருந்த நம்பிக்கையில் ஒரு சிறு விரிசல் எப்படியோ எனது உலகம் அறியாத உள்ளத்தில் ஏற்பட்டுவிட்டது’ என்று உணர்ந்த எம்ஜிஆர், காங்கிரசில் இருந்து விலகியதற்கு இதுவும் ஒரு காரணம் என்று கூறுகிறார் : ‘நான் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதற்கு இதுமட்டும்தான் காரணம் என்றில்லா விட்டாலும் இதுவும் ஒரு காரணம் என்று சொல்லுவதில் தவறில்லை. காரணங்களை இப்போது சொல்லவில்லை. சரியான சந்தர்ப்பத்தில் சொல்லுகிறேன்.’

காங்கிரசில் இருந்து விலகி இருந்தாலும்கூட வேறு எந்த ஒரு இயக்கத்திலும் முக்கியமாக திராவிடர் கழகத்தில் அப்போது தன்னை அவர் ஈடுபடுத்திக் கொள்ளவில்லை.

முன்னமே, என்.எஸ்.கிருஷ்ணனுடன் தொடர்பு ஏற்பட்டு குடியரசு இதழ்களை படித்துவந்தபோதிலும் எம்ஜிஆர் திராவிடர் கழகத்தில் சேரவில்லை. அறிஞர் அண்ணாவின் பணத்தோட்டம் என்ற நூலைப் படித்ததிலிருந்து அண்ணாவின் கொள்கையில் அவருக்கு ஈடுபாடு வந்தது. இதை எம்ஜிஆரே சொல்கிறார் : ‘பொதுவாகவே எனக்கு அரசியலைப் பொறுத்தவரையில் சோர்வே உண்டாகிவிட்டது. அத்தகைய நிலையில்தான் அமரர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பணத்தோட்டம் என்ற புத்தகத்தைப் படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. படித்தேன். பலமுறை படித்தேன். கொஞ்சம் கொஞ்சமாகத் தொடர்பு ஏற்பட்டது. அண்ணாவோடு அல்ல. அவருடைய கொள்கையோடு. எனது கேள்விகட்கு – காந்திய வழியில் இன்னமும் நான் வைத்துள்ள முழு நம்பிக்கையின் அடிப்படையில் நான் கேட்ட கேள்விகட்கு – பேரறிஞர் அண்ணாவிடமிருந்து என் உள்ளம் ஏற்றுக் கொண்ட பதில்கள் நிறையக் கிடைத்தன’

எம்ஜிஆர் அவர்களுக்கும் அண்ணா அவர்களுக்கும் ஏற்பட்ட முதல் சந்திப்பே கொள்கைவழி சந்திப்பு அல்ல. திராவிடர் கழகத்தில் சேரும் முதல் சந்திப்புக்கூட அல்ல. அண்ணா அவர்கள் சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் என்ற நாடகத்தை எழுதியிருந்தார். அதில் சிவாஜியாக நடிப்பதற்கு ஒரு நடிகர் தேவைப்பட்டார். அதற்காகவே நடந்த முதல் சந்திப்பு அது. அதைப்பற்றி எம்ஜிஆர் விளக்குகிறார்:‘திரு.டி.வி.நாராயணசாமி அவர்கள் என்னை அவருக்கு அறிமுகப்படுத்தியபோது அண்ணா அவர்களைவிட எவ்வளவோ படிகள் அறிவிலும், ஆற்றலிலும், அனுபவத்திலும் திறமையிலும் மிகவும் கீழ்நிலையிலே இருந்த என்னை ‘இவர்தான் எம்.ஜி.ராமச்சந்திரன். நான் சொன்னேனே. சிவாஜியாக நடிப்பதற்கு ஒருவரை ஏற்பாடு செய்திருக்கிறேன். என்று அவர் இவர்தான்’ என்று சிபாரிசு செய்தபோது, முன்பின் அறியாத ஒருவன் என்ற எண்ணமேயன்றி, பல ஆண்டுகள் ஒன்றாக அவரோடு சேர்ந்து வளர்ந்து வாழ்ந்து வரும் தம்பியிடம் கொள்ளும் பாச உணர்வோடும், அதேநேரத்தில் பண்போடும் கண்ணியத்தோடும் ‘வாங்க, உட்காருங்க’ என்று கூறி அண்ணா என்னை வரவேற்று இனிய மொழிகள் புகன்றார்’

எனினும் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளராக இருந்த அண்ணாவின் நாடகத்தில் எம்ஜிஆர் நடிக்கவில்லை.

1949ல் திராவிடர் கழகத்தில் பிரிந்த அண்ணா அவர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தை துவக்கினார்.

அறிஞர் அண்ணா, கருணாநிதி போன்றவர்களுடன் சினிமாத்துறையின் மூலம் நட்பு ஏற்பட்டு, நெருங்க, நெருங்க கடைசியில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். ஆனாலும் இந்தக் காலக்கட்டங்களில் ஈவெரா மீது மதிப்புக் கொண்டிருந்தார் என்பதை மறுப்பதற்கில்லை.

ஆக, எம்ஜிஆர் முதலிலே காங்கிரஸ்காரராக இருந்தார். பின்பு அதிலிருந்து விலகியிருந்தார். ஆனாலும் திராவிடர் கழகத்தில் சேரவில்லை. உறுப்பினாரக்கூட ஆகவில்லை. நேரடியாக திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து வந்த திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

திராவிடர் கழகம் என்ற வேரில் இருந்து கிளர்ந்தெழுந்து வந்தவர் எம்.ஜி.ஆர். என்றால் அந்த வேரை எதற்காக வெட்டிக் கொண்டு அண்ணாவோடு சென்றார் எம்.ஜி.ஆர்.?

முதன்முதலில் எம்ஜிஆர் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திலேதான் தன்னை இணைத்துக்கொண்டார் என்று சொன்னால் திராவிடர் கழகம் என்ற வேரில் இருந்து கிளர்ந்தெழுந்தவர் எம்.ஜி.ஆர். என்று சொல்வது பொய்தானே?

பொய் சொல்வதில் வல்லவர்கள் திராவிடர் கழகத்தினர். கோயாபல்ஸ் படித்த கல்லூரியில் திராவிடர் கழகத்தினர் ஆசிரியராக இருந்திருப்பார்கள் போல.

திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்த திராவிட முன்னேற்றக் கழகத்தினர் அவ்வப்போது பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொண்டனர். ஈவெரா திமுகவை கண்ணீர்த்துளிகள் என்றே அழைத்து வந்தார். அதேபோல் திமுகவும் ஈவெராவை விமர்சனம் செய்தே வந்தது.

ஈவெரா 72 வயதில் மணியம்மையை திருமணம் செய்து கொண்டார். அண்ணா தலைமையிலான அணி அதை எதிர்த்துதான் வெளியேறியது. எம்ஜிஆர் 1964ல் பணக்கார குடும்பம் என்ற படத்தில் நடித்தார். அதில் கதாநாயகனின் தந்தை தனக்கு ஒரு துணை தேடிக் கொள்ள அதை எம்.ஜி.ஆர். அவர்கள் சாடிவிட்டுத் தன் தங்கை மணிமாலாவுடன் வீட்டை விட்டு வெளியேறுவார். இந்தப் படத்தின் மையநோக்கே ஈவெராதான் என்று அப்போது பத்திரிகைகள் எழுதின.

===

எல்லாம் போகட்டும். எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றி வீரமணி என்ன சொல்கிறார்? ‘திராவிடர் கழகம் என்ற வேரில் இருந்து கிளர்ந்தெழுந்து ஆலமரமாக வளர்ந்தவர் எம்.ஜி.ஆர். திராவிட இயக்கத்தைச் சேர்ந்த அவரை அபகரிக்க ஆர்எஸ்எஸ் திட்டமிட்டதால் நாங்கள் முந்திக்கொண்டோம்’ என்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் வீரமணி பேசியிருக்கிறாரே அதுவாவது உண்மையா?

“எம்.ஜி.ஆர். அவர்களைப் பொறுத்தவரை, பெரியார் பெயரைப் பயன்படுத்த விரும்புகிறாரே தவிர, பெரியார் கொள்கைக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை என்று நாங்கள் தெளிவுபடுத்தி இருக்கிறோம்”.

இப்படி சொன்னது யார் தெரியுமா?

ஆர்எஸ்எஸ் சொல்லவில்லை.

இந்து முன்னணி சொல்லவில்லை.

சாட்சாத் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்கள்தான்.

‘திராவிடர் கழகம் என்ற வேரில் இருந்து கிளர்ந்தெழுந்து ஆலமரமாக வளர்ந்தவர் எம்.ஜி.ஆர். திராவிட இயக்கத்தைச் சேர்ந்த அவரை அபகரிக்க ஆர்எஸ்எஸ் திட்டமிட்டதால் நாங்கள் முந்திக்கொண்டோம்’ என்று சொன்ன அதே வீரமணியின் வாய்தான் 1985லே அதாவது எம்.ஜி.ஆர். அவர்கள் உயிருடன் இருந்தபோதே ‘எம்.ஜி.ஆர். அவர்களைப் பொறுத்தவரை, பெரியார் பெயரைப் பயன்படுத்த விரும்புகிறாரே தவிர, பெரியார் கொள்கைக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை’ என்று சொன்னது. இந்த அறிவிப்பை ‘விடுதலைப் போரும், திராவிடர் இயக்கமும் உண்மை வரலாறு’, (பக்.223) என்ற நூலிலேயே தெள்ளத்தெளிவாக விளக்கியுள்ளார் வீரமணி.

இன்று ஆர்எஸ்எஸ் அமைப்பு எம்ஜிஆர் அவர்களைப் பற்றி நான்கு பக்கம் எழுதிவிட்டதாலேயே எம்ஜிஆரை திராவிடர் கழக வேர், ஆலமரம் என்றெல்லாம் எழுத வைக்கிறது என்றால் திராவிடர் கழகம் எந்த அளவிற்கும் பொய் சொல்லும், வரலாற்றைத் திரிக்கும் என்பதைத் தவிர இதில் வேறு சிறப்பம்சம் எதுவும் இல்லை.

1964ல் ஈவெராவின் பிறந்தநாளில் அவரைப் பாராட்டி எம்ஜிஆர் அவர்கள் பேசியதை குறிப்பிடுகிறார்கள் திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள தந்தை பெரியாரும் டாக்டர் எம்ஜிஆரும் என்ற புத்தகத்தில். ஆனால், 8.8.65 அன்று பெரியார் திடலில் நடந்த காமராஜர் பிறந்தநாள் விழாக் கூட்டத்தில் கலந்துகொண்டு, எம்.ஜி.ஆர். அவர்கள் ‘காமராசர் என் தலைவர், அண்ணா என் வழிகாட்டி’ என்றார். (கவிஞர் கருணானந்தம், பக்.385) அந்த நிகழ்ச்சியில் ஈவெராவைப் பாராட்டி பேசினாலும்கூட ஈவெரா எனது வழிகாட்டி என்றோ, ஈவெரா எனது தலைவர் என்றோ எம்.ஜி.ஆர்.அவர்கள் குறிப்பிடவில்லையே ஏன்? ஈவெராவை தலைவராகவும் அல்லது குறைந்தபட்சம் வழிகாட்டியாகவும்கூட அறிவிக்கவில்லை என்றால் என்ன அர்த்தம்? வீரமணி சொன்னதுதான். ‘‘எம்.ஜி.ஆர். அவர்களைப் பொறுத்தவரை, பெரியார் பெயரைப் பயன்படுத்த விரும்புகிறாரே தவிர, பெரியார் கொள்கைக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை’’ என்பதுதானே!.

‘‘எம்ஜிஆர் கடைசிக்காலத்தில் ஆன்மிகவாதியாக மாறியிருக்கலாம். அதனாலேயே அவர் திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர் அல்ல என்று சொல்வது எப்படிச் சரியாகும்?’’ என்று திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் கேட்கிறார். எம்ஜிஆர் அவர்களை திராவிட இயக்கத்தவராகவே கட்டமைத்து வருகின்றனர்.

இதற்கு வீரமணி மட்டுமல்ல இவர்களின் இயக்கத்தைச் சார்ந்த பலரும் எம்ஜிஆர் அவர்களை திராவிட இயக்கத்தவராக – அதிமுகவை திராவிட இயக்கமாக அங்கீகரித்ததில்லை.

திராவிடர் கழக பத்திரிகை விடுதலையில் க.திருநாவுக்கரசு அவர்கள் பிரகாஷ் கரத் அவர்களுக்கு பதில் அளிப்பதற்காக ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் ‘‘அதிமுகவுக்கு மதச்சார்பற்ற தன்மைகளோ, ஜனநாயக மாண்புகளோ இருப்பதாக நாம் கூறிக்கொள்ள முடியாது. அக்கட்சி திராவிட இயக்க மேல் பூச்சுக் கொண்ட கட்சி; அக்கட்சியின் நிறுவனர்க்கே அவ்வியக்கத்தின் கொள்கைகளில் நம்பிக்கை இருப்பதாகச் சொல்லமுடியாது என்று அவரைப் பற்றி காவல் அதிகாரி மோகன்தாஸ் எழுதிய நூலொன்றில் காணக்கிடக்கிறது. இப்போதைய நிலையை நாட்டு மக்களே நன்றாக அறிவார்கள். அதிமுகவின் உருவம் வேறு, உள்ளடக்கம் வேறு.’’
(http://www.viduthalai.in/previousyear/other-news/97-essay/109554—–3.html

அக்கட்சி(அதிமுக) திராவிட இயக்க மேல் பூச்சுக் கொண்ட கட்சி; அக்கட்சியின் நிறுவனர்க்கே (எம்ஜிஆர்) அவ்வியக் கத்தின் கொள்கைகளில் நம்பிக்கை இருப்பதாகச் சொல்ல முடியாது என்று வேறு ஒருவர் சொன்னதை மறுக்காமல் அப்படியே வழிமொழிந்து இருக்கிறது திராவிடர் கழக பத்திரிகையான விடுதலை. ஆனால் இன்று எம்ஜிஆர் திராவிட இயக்கத்தவராக வீரமணிக்கு, கலி.பூங்குன்றன் அவர்களுக்கு தெரிவது ஆச்சர்யம்தான்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் (மே 5, 2008) கூட அதிமுக திராவிடக் கட்சியா என்ற விவாதம் எழுந்தது.

அப்போதைய அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்த கலைராஜன், ‘‘திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு உலகப் பொருளாதாரமும் தெரியும். பேரவைத் தலைவர் கூறியது எங்கள் மனதை காயப்படுத்துகிறது’’ என்றார்.

அப்போதைய அமைச்சராக இருந்த துரைமுருகன் குறுக்கிட்டு, ‘அதிமுக திராவிடக் கட்சி அல்ல’ என்றார். அப்போது சட்டப்பேரவை அதிமுக கொறடா கே.ஏ.செங்கோட்டையன் எழுந்து, ‘திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சிதான் அதிமுக’ என்றார்.

செங்கோட்டையன் சொன்னது சரிதான். அதிமுக திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சிதான் என்று திராவிடர் கழகம் அப்போது ஏதாவது அறிக்கை வெளியிட்டதா என்று தேடிப்பார்க்கிறேன். எதுவும் கிடைத்தபாடில்லை.

எம்ஜிஆர் அவர்களின் நூற்றாண்டுச் சிறப்பிதழில் மஞ்சை வசந்தன் அவர்கள் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் எம்ஜிஆர் அவர்கள் பெரியாருக்காக கொண்டுவந்து நிறைவேற்றிய விஷயங்களையும் கூறி எம்ஜிஆர் அவர்களை புகழ்ந்து எழுதியுள்ளார். கடைசியில் முடிக்கும்போது வாழ்க எம்ஜிஆர் புகழ் என்று முடிக்கிறார். இப்படிப் புகழ்கிற மஞ்சை வசந்தன் எம்ஜிஆர் பற்றி என்ன கூறியிருக்கிறார் என்பதையும் பார்த்துவிடலாமா? பார்த்துவிடுவோம்.

திராவிட இயக்கத்தவராக இன்று கட்டமைக்கின்ற எம்ஜிஆர்தான் திராவிட இயக்கம் நீர்த்துப்போனதற்கு முதன்மைக் காரணம் என்று கடுமையாக விமர்சித்துள்ளார். அவருடைய பிளாக்கில் எழுதியுள்ளதை அப்படியே தருகிறேன்:

‘‘திமுகவை எடுத்துக்கொண்டால் அதிலிருந்து எம்ஜிஆர் பிரிந்தது வரலாற்றுப் பிழை. திராவிட இயக்கம் நீர்த்துப் போனதற்கு அதுவே முதன்மைக் காரணம்.

கட்சியில் கணக்குக்கேட்டு கட்சியின் கணக்குகளைச் சரி செய்ய வேண்டும் என்பது எம்ஜிஆர் இலக்கு என்றால் என்ன செய்திருக்க வேண்டும்?

தன் கோரிக்கையில் நியாயம் இருந்தால், அதை கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில் அதை விளக்கி தன் பக்கம் உறுப்பினர்களை பெருமளவு ஈர்த்து தீர்வு காண வேண்டும். அதைவிட்டுவிட்டு, கட்சியின் செயற்குழுவில் விவாதிக்க வேண்டியவற்றை பொதுமக்கள் மத்தியில், பொதுக்கூட்டத்தில் பேசுவது உள்நோக்கம், சுயநலநோக்கம், தன்முனைப்பு இல்லாமல் வேறு என்ன? எம்ஜிஆரின் கோரிக்கை சரியென்றால் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவைப் பெற்று குற்றவாளியை விலக்கிக் கட்சியைத் தூய்மைப்படுத்த வேண்டும். அதுதானே சனநாயகம். அதை விட்டுவிட்டு, வேறு கட்சி தொடங்கும் திட்டத்தை முன்கூட்டியே வகுத்துக் கொண்டு அதற்கேற்ப குற்றம் சுமத்திச் செயல்படுவது சனநாயக முறைப்படி சரியாகுமா?
(http://manjaivasanthan.blogspot.in/2016_01_01_archive.html?m=1)

எம்ஜிஆர் உள்நோக்கம் உடையவர்
எம்ஜிஆர் சுயநல நோக்கம் உடையவர்
எம்ஜிஆர் தன்முனைப்பு இல்லாதவர்

இப்படிச் சொன்னவர்தான் மஞ்சை வசந்தன். ஆனால் இன்று அதே மஞ்சை வசந்தன் வாழ்க எம்ஜிஆர் புகழ் என்று சொல்கிறார். பச்சோந்தியைவிட சீக்கிரத்தில் நிறம் மாறக்கூடியவர்கள் இந்த திராவிடர் கழகத்தினர் என்பதை எப்போதுமே நிரூபித்து வருகிறவர்கள் என்பதில் ஐயமில்லை.

திராவிடர் கழகமானாலும் சரி, திராவிட முன்னேற்றக் கழகமானாலும் சரி எம்ஜிஆர், அதிமுக – இரண்டுமே திராவிட இயக்கம் அல்ல என்கிற புரிதல் இருந்தது; இன்றும் இருக்கிறது. ஆனால் இன்று எம்ஜிஆர் அவர்களை திராவிட இயக்கத்தவராக தத்தெடுக்கிற நிலைமையை காலம் உருவாக்கியிருக்கிறது. அது வெற்றி பெறாது.

தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Information
About Us
Frequnetly Asked Questions
International Shipping
Newsletter
Payment Options
Shipping & Returns
Privacy Policy
Terms & Conditions
Cancellation & Return Policy
How To Track My Order
Customer Service
Contact Us
Returns
My Account
My Account
Order History
Wish List
Newsletter
எமது முகவரி:
தடாகமலர் பதிப்பகம்,
No. 105, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை,
(திருவல்லிக்கேணி தபால் நிலையம் அருகில்)
திருவல்லிக்கேணி,
சென்னை - 600 005

தொலைபேசி எண் : +91 97909 24629

மின்னஞ்சல் முகவரி : sales@thadagamalar.com