எம்ஜிஆர் என்கின்ற இந்து…! – 1

ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அதிகாரப்பூர்வ இதழ் விஜயபாரதம். அந்த இதழில் (14-10-2016) எம்.ஜி.ஆர். கிருபானந்தவாரியார் அவர்களின் படத்தை போட்டு எம்.ஜி.ஆர். போல ஹிந்துத்துவ ஆதரவு முதல்வர் நேற்றும் இல்லை, நாளையும் இல்லை என்று முகப்பு அட்டையைப் போட்டு உள்ளே வெறும் நான்கு பக்கத்திற்கு எம்.ஜி.ஆர். பற்றி கட்டுரை வெளியிட்டது.

உடனே திராவிடர் கழகம் தங்களுடைய இதழான உண்மை இதழில் (அக்டோபர் 16-31, 2016) ஆர்எஸ்எஸ் அமைப்பை விமர்சனம் செய்து எம்.ஜி.ஆர். ஈவெரா படத்தை போட்டு பதினொரு பக்கத்திற்கு கட்டுரை வெளியிட்டு உள்ளது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையும் நடத்தியிருக்கிறது.

‘திராவிடர் கழகம் என்ற வேரில் இருந்து கிளர்ந்தெழுந்து ஆலமரமாக வளர்ந்தவர் எம்.ஜி.ஆர். திராவிட இயக்கத்தைச் சேர்ந்த அவரை அபகரிக்க ஆர்எஸ்எஸ் திட்டமிட்டதால் நாங்கள் முந்திக்கொண்டோம்’ என்று நூற்றாண்டு விழாவில் வீரமணி பேசியிருக்கிறார். ஆனால் அதில்கூட ‘புரட்சி நடிகர்’, ‘புரட்சித் தலைவர்’ என்று இல்லாமல் ‘வள்ளல் எம்.ஜி.ஆர்’ என்றே நூற்றாண்டு விழாவை கொண்டாடியிருக்கிறார்கள். எம்.ஜி.ஆர் அவர்களுக்கு புரட்சி நடிகர், புரட்சித் தலைவர் என்ற அடைமொழியை ஏன் அவர்கள் கொடுக்கத் தயங்குகிறார்கள் என்பது அவர்களுக்கேத் தெரியும். ஏனென்றால் அவர் பல சமயங்களில் ஈவெராவின் கொள்கைகளுக்கு, திராவிடர் கழக கொள்கைகளுக்கு எதிராகவே செயல்பட்டுள்ளார் என்பது அவர்களுக்கும் தெரியும். நமக்கும் தெரியும்.

எம்.ஜி.ஆர். அவர்களை திராவிடர் கழகத்துக்காரராகவே, ஈவெராவின் சீடராகவே குறிப்பிட்டு அக்கட்டுரையிலும் அவர்கள் வெளியிட்டுள்ள “தந்தை பெரியாரும் டாக்டர் எம்ஜிஆரும்” நூலிலும் எழுதியிருக்கிறார்கள். அப்புத்தகத்தில் ஈவெரா பற்றி எம்.ஜி.ஆர் அவர்கள் என்ன பேசியிருக்கிறார் என்று நான்கு கட்டுரைகளையும் ஈவெராவின் ஒரு கட்டுரையும் இடம் பெற்றுள்ளது. ஈவெராவின் கட்டுரையில் எம்.ஜி.ஆர் அவர்களைப் பற்றி வார்த்தைக்குக்கூட ஏதும் புகழ்ந்துவிட வில்லை என்பதை படிப்பவர்கள் அனைவரும் புரிந்து கொள்ளலாம். பக்கத்தை கூடுதலாக்கவே அதை சேர்த்திருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

எம்.ஜி.ஆர் அவர்கள் ஈவெராவை பற்றிய பெருமதிப்புக் கொண்டிருந்தார் என்று திராவிடர் கழகம் சொல்கிறது. உண்மையிலேயே அப்படிக்கூட இருக்கலாம். ஆனால் ஈவெராவும் திராவிடர் கழகமும் எம்.ஜி.ஆர் அவர்களை எப்படி மதிப்பிட்டது என்பது நமக்கு முக்கியம். அதே போல எம்.ஜி.ஆர் அவர்களும் திராவிடர் கழக கொள்கைகளை எந்த அளவுக்கு பின்பற்றியிருக்கிறார் என்பதும் அக்கொள்கைகளுக்கு அவர் எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்தார் என்பதும் நமக்கு முக்கியம். இரண்டையுமே நாம் பார்த்துவிடலாம்.

எம்.ஜி.ஆர். பற்றிய ஈவெராவின் மதிப்பீடு

ஈவெரா எம்.ஜி.ஆர் அவர்களை எந்த அளவிற்கு மதிப்பீடு செய்து வைத்திருந்தார் என்கிற கேள்வி மிக மிக முக்கியமானது. திராவிடர் இயக்க திரைக் கலைஞர்களை அவர்கள் விரும்பினார்கள். ஏனென்றால் தங்களால் கொண்டு செல்ல முடியாத கருத்துக்களை எளிய மக்களிடம் திரைக்கலைஞர்கள் எளிதாக கொண்டு செல்கிறார்கள் என்பதால்தான். அதற்காக அவர்களை உச்சத்தில் வைத்து போற்றிவிடவில்லை. பொதுவாகவே சினிமா நடிகர்கள்மேல் பெரிய மரியாதை கொண்டிருந்தவர் அல்லர் ஈவெரா. சினிமாவைவிட குடிப்பதே மேல் என்ற எண்ணம் கொண்டிருந்தவர் அவர். அவர்கள் கூத்தாடிகள் என்ற தொனியே அவரிடம் இருந்தது.

பல திரைக்கலைஞர்களை அவர்கள் ஏற்றிவிட்டாலும் ஈவெராவைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆர் அவர்களை பற்றிய மதிப்பீடு மிகவும் அருவருக்கத்தக்க நிலையிலேயே இருந்தது. திராவிடர் கழக கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதற்கும், திராவிட முன்னேற்ற கழக வெற்றிக்கும் எம்.ஜி.ஆர். அவர்கள் தேவைப்பட்டபோது பக்கத்தில் வைத்துக் கொண்டார்கள். ஆனால் திராவிட முன்னேற்றக் கழகத்தில் அவருக்குப் பதவி வந்தபோது எதிர்த்தவர்களில் ஒருவர் ஈவெரா.

எம்ஜிஆர் திராவிட முன்னேற்றக்கழகத்திற்கு உழைத்த உழைப்பாலேயே அவருக்கு கட்சி பதவிகள் தேடிவந்தன. 1957ல்தான் தேர்தலில் போட்டியிட திமுக முடிவெடுத்தது. முதல் தேர்தலில் சில கூட்டங்களில் பிரச்சாரம் செய்தார். 124 தொகுதிகளில் போட்டியிட்டாலும் 15 இடங்களில்தான் திமுக வெற்றிபெற்றது.

அதற்கு அடுத்து 1959ல் நடந்த சென்னை மாநகராட்சித் தேர்தலில் எம்ஜிஆர் அவர்கள் பிரச்சாரத்தை வேகப்படுத்தினார். தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ‘திமுகழகத்தின் சார்பில் அறிஞர் அண்ணா, மு.கருணாநிதி, அன்பழகன், மதியழகன், ஆசைத்தம்பி, சி.பி.சிற்றரசு, சத்தியவாணி முத்து, ஈவெகி.சம்பத், டி.வி.நாராயணசாமி, எம்.ஜி.ராமச்சந்திரன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், கவிஞர் கண்ணதாசன், கே.ஆர்.ராமசாமி, பொன்னுவேலு, காஞ்சிமணி மொழியார் ஆகியவர்கள் நாள் தவறாமல் நான்கு கூட்டங்களுக்கு மேல் பேசி வாக்காளர்களின் ஆதரவைத் திரட்டினர்’ என்று திமுக வரலாறு நூலில் பதிவு செய்கிறார் டி.எம்.பார்த்தசாரதி. 100 இடங்களில் 45 இடங்களைப் பெற்றது திமுக. திமுகவின் அ.பொ.அரசு சென்னை மேயரானார்.

1962 பிப்ரவரியில் தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் வந்தது. அந்தத் தேர்தலில் எம்ஜிஆர் படுதீரவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தன்னுடைய மனைவி சுகவீனப்பட்டு இருந்தார். இதையெல்லாம் கருதாமல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதைப் பற்றி அப்போது அவருடைய பாதுகாவலராக இருந்த ஸ்டண்ட் மாஸ்டர் எம்.கே. தர்மலிங்கம் கூறுவதை கேட்போம்.

‘1962-ல் எம்ஜிஆர் திமுகவுக்கு ஆதரவு தேடித் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய ஆயத்தமானார். அப்போது எம்ஜிஆரின் மனைவி சதானந்தவதி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் போராடிக் கொண்டிருந்தார். அவரது அருகிலிருந்து ஆறுதல் சொல்ல முடியாத நிலையில் எம்ஜிஆர் பிரச்சாரத்திற்குப் புறப்பட்டார். தர்மபுரியிலிருந்து சேலம் செல்லும் வழியில் எம்ஜிஆரைச் சுட்டுக் கொல்வதற்காகப் பிரபலக் கொள்ளைக்காரன் மம்பட்டியானை காங்கிரசார் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதனால் அந்த வழியே வரவேண்டாம் என்று அப்பகுதி திமுகவினர் அவசரச்செய்தியொன்றை எம்ஜிஆருக்கு அனுப்பியிருந்தார்கள். எம்ஜிஆர் அதைப் பார்த்துச் சிரித்துவிட்டுப் புறப்பட்டார்…. ஆனால் எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை. சேலம் சென்றபின் திருச்சி சென்றோம். சென்னையிலிருந்து திருச்சிக்கு அவசர போன் வந்தது. ‘சதானந்தவதி சீரியசாக இருக்கிறார்’ என்று. எம்ஜிஆர் சென்னை செல்லலாம் என்று முடிவெடுத்தபோது முரசொலிமாறன் வந்து ‘கருணாநிதி (தஞ்சையில் போட்டியிட்டார்) தங்களைப் பிரச்சாரத்திற்கு வரும்படி அழைத்திருக்கிறார். தாங்கள் வந்தால்தான் ஆச்சு’ என்று பிடிவாதமாகச் சொல்ல, எம்ஜிஆருக்கு தர்மசங்கடமாக இருந்தது. அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் தஞ்சாவூருக்கே புறப்பட்டார்…தேனியில் எஸ்எஸ்ஆரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்வதற்காகப் பெரிய குளத்திலிருந்து புறப்பட்டோம். தேனியில் கூட்டம் நடக்கும் இடத்திற்குச் சென்றால் அங்கு திமுக நிர்வாகிகள் நாங்கள் பத்திரமாக வந்திருப்பது பற்றி ஆச்சரியமும் நிம்மதியும் அடைந்தார்கள். ‘உங்களை மலைப்பகுதிக்குப் பிரச்சாரம் செய்வதற்கு அழைப்பதுபோல் அழைத்து உங்களுடன் வேலை கொழுத்துவதற்கு திட்டமிட்டார்கள். இதற்காக எஸ்எஸ்ஆரை எதிர்த்து நிற்கும் காங்கிரஸ் வேட்பாளர் தியாகராஜன் நெல்லையிலிருந்து குண்டர்களை வரவழைத்திருக்கிறார்’ என்று எம்ஜிஆரிடம் சொன்னார்கள்.’

இதைப் பற்றி எம்ஜிஆர் அவர்களே பதிவு செய்கிறார் : ‘1962 பிப்ரவரி மாதம் பொதுத்தேர்தலின்போது நான் பல ஊர்களுக்குச் சென்று கழகக் கூட்டங்களில் பேசினேன். ஒருநாளைக்கு ஏறத்தாழ முப்பது, நாற்பது, கூட்டங்களில் பேசியிருப்பேன். என்னிடம் சொல்லப்பட்ட கூட்டங்கள் பத்து என்றால், முன்னறிவிப்பின்றி ஏற்பாடு செய்து, வழி மறித்து நடத்தப்பட்ட கூட்டங்கள் முப்பதாவது இருக்கும். அந்தநிலையில் நான் ஊர் சுற்றிக் கொண்டிருந்தபோது எனது மனைவி சதானந்தவதி எமனோடு போராடிக் கொண்டிருந்தாள்’

தன் கட்சி வெற்றி பெறுவதற்காக தன் மனைவி மரணமுறும் தருவாயில் இருந்தாலும் தன் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற நிலையிலும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிபெற வேண்டும் என்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டார் எம்ஜிஆர். இந்தத் தேர்தலில் திமுக 50 தொகுதிகளில் வெற்றிபெற்றது.

எம்ஜிஆர் திமுகவில் இருக்கும்போது எந்த நடிகரையும்விட திமுகவிற்கு அதிக நிதி உதவி செய்தவர் அவர் மட்டுமே.

1966 டிசம்பரில் சென்னை விருகம்பாக்கம் திமுக தேர்தல் விளக்க மாநாட்டில் அண்ணா பேசும்போது, ‘‘என் தம்பி எம்ஜிஆர் நான் கேட்டால் ஒரு இலட்சம் என்ன ஓராயிரம் இலட்சங்களை என்னிடம் கொடுப்பார். அதற்கான தாராள குணமும், தயாள மனமும் அவரிடம் உண்டு என்பது எனக்குத் தெரியும். ஆனால் அந்த லட்சங்களைவிட, விலை மதிப்பில்லாத என் தம்பியின் இனிமை தவழும் முகத்தை ஒரு முறையாவது காட்டித் தமிழகத்தைச் சுற்றி வலம் வந்தால் போதும். அதுவே பல இலட்ச வாக்குகளை வாரி வழங்கும் என்பதில் எனக்கு எள்ளளவும் அய்யப்பாடு கிடையாது’’ என்று பேசினார். அந்த அளவிற்கு எம்.ஜி.ஆர். அவர்களுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இருந்தது. 1967 தேர்தலின் போது எம்.ஜி.ஆர். அவர்களுக்கு இருந்த மக்களின் செல்வாக்கை கச்சிதமாக திட்டம்போட்டு வாக்குகளாக அள்ளியது திமுக.

1967 பிப்ரவரியில் பொதுத்தேர்தல். அண்ணா பேசிய அதே விருகம்பாக்கம் மாநாட்டில் எம்.ஜி.ஆர். அவர்கள் ‘நாம் எல்லோரும் முடிந்த அளவு முழு ஆற்றலைப் பயன்படுத்தி காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தியே ஆக வேண்டும்’ என்று பேசியிருந்த படியே தேர்தல் பிரச்சாரக் களத்தில் தீவிரமாக இறங்கிவிட்டார்.

அவருடைய தேர்தல் பிரச்சாரத்தைப் பற்றி ஸ்டண்ட் மாஸ்டர் எம்.கே.தர்மலிங்கம் கூறுகிறார் :

‘1967 தேர்தல் பிரச்சாரத்தின்போதும் எம்ஜிஆர் பல ஆபத்துக்களைச் சந்திக்க நேர்ந்தது. மதுரை மாவட்டத்தில் பல ஊர்களில் நிறைய மக்கள் கூடுவார்கள் என்பதால் ஊருக்கு வெளியே ஆற்றங்கரை ஓரங்களில், வயல் வெளிகளுக்கு அருகில் கூட்டம் நடத்துவார்கள். வேனிலிருந்து இறங்கி சற்று தூரம் நடந்துதான் செல்ல வேண்டியிருக்கும். அதுபோன்ற நேரங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு நாங்கள் செல்லும் வழி இருட்டாகிவிடும். அப்படிப்பட்ட சமயங்களில் எம்ஜிஆரின் முன்னே பத்மநாபன் செல்வார். இருபுறமும் நானும், ராமகிருஷ்ணனும் செல்வோம். அப்போது எம்ஜிஆர் என்ன செய்வார் தெரியுமா? அவரது கழுத்தில் சிறிய கருப்பு-சிவப்பு துண்டு ஒன்றிருக்கும். அதை மார்பின் முன்பாக இருமுனைகளையும் இரண்டு கைகளால் இறுகப் பிடித்துக் கொள்வார். அது மார்புக் கவசம் போலிருக்கும். யாரும் கத்தியை வீசினாலும் மார்பில் பாயாமல் கைகள் தடுத்துக் கொள்ளும்.’

சூறாவளி பிரச்சாரம் செய்துவிட்டு திரும்பியிருந்தபோது தான் திராவிடர் கழகத்தின் தியாகியாக ஆக வேண்டும் என்ற காரணத்தால் எம்.ஆர்.ராதா எம்ஜிஆர் அவர்களை சுட்டார். கழுத்தில் கட்டோடு இருக்கிற புகைப்படம் வெளியாகி அந்த தேர்தலில் திமுக அமோக வெற்றிபெற்றது. 138 இடங்களை வென்று ஆட்சியமைத்தது. எம்ஜிஆர் அவர்களின் உழைப்பை அண்ணா அவர்கள் மதித்தார். போற்றினார். அமைச்சரவையில் யார் யாரை சேர்க்க வேண்டும் என்ற பட்டியல் எம்ஜிஆருக்கு காட்டப்பட்டே நியமிக்கப்பட்டது. அந்த அளவிற்கு எம்ஜிஆரின் உழைப்புக்கு மரியாதை கொடுத்தார் அண்ணா அவர்கள். ஈவெராவிற்கு காணிக்கையாக்கப்பட்டது அந்த ஆட்சி.

ஆட்சி நடந்துகொண்டிருக்கும்போதே 1969 பிப்ரவரி 3ம்நாள் அண்ணா அவர்கள் காலமானார். அப்போது உடனடியாக முதல்வர் பதவி நாவலர் நெடுஞ்செழியன் ஏற்றாலும் 1969 பிப்ரவரி 10ம்நாள் கருணாநிதி அவர்கள் தலைமையில் புதிய திமுக அமைச்சரவை அமைந்தது. கட்சிக்குள் கடும் பிரச்சினை ஏற்பட்டது. கட்சிக்குள் பிரச்சினை பேசித் தீர்த்துக் கொள்ளப்பட்டது. அதாவது, 1969ல் தலைவர் கருணாநிதி, பொதுச்செயலாளர் நாவலர் நெடுஞ்செழியன், பொருளாளர் எம்ஜிஆர் என்று அறிவிக்கப்பட்டது.

திமுகவில் எம்ஜிஆர் அவர்கள் காலம், நேரம் பார்க்காமல் உழைத்த உழைப்புக்கு பொருளாளர் பதவி தேடி வந்தது. எம்ஜிஆர் அவர்கள் பொருளாளர் ஆனதில் பலருக்கு சந்தோஷம். ஒரு சிலரைத் தவிர. பலருக்கு எரிச்சல். அதிர்ச்சி. அதில் முக்கியமானர் ஈவெரா.

எம்ஜிஆர் அவர்கள் பொருளாளராக அறிவிக்கப்பட்டபோது ஈவெரா ‘அய்யய்யோ கலைஞர் எதிலேயோ காலை வைத்து விட்டாரே’ என்று பதறினார். (கருணானந்தம், பக்.609)

எதிலேயோ காலை வைத்துவிட்டார் என்றால் எதில்? மலத்திலா? சேற்றிலா? சாணத்திலா? அப்படியென்றால் எம்.ஜி.ஆர். மலமா? எம்.ஜி.ஆர். சேறா? எம்.ஜி.ஆர். சாணமா? இந்த மூன்றில் ஒன்றுதான் எம்.ஜி.ஆர். இதுதான் திராவிடர் கழக தலைவரான ஈவெராவின் பார்வை. இதுதான் எம்.ஜி.ஆர் அவர்களைப் பற்றிய ஈவெராவின் உயர்ந்த, உன்னதமான மதிப்பீடு. இது எவ்வளவு அருவருத்தக்க மதிப்பீடு? எம்.ஜி.ஆர் அவர்களைப் பற்றிய இந்த கீழ்த்தரமான மதிப்பீட்டை வேறுயாராவது சொல்லியிருக்கிறார்களா? ஆனாலும் வீரமணி சொல்கிறார்: ‘ஈவெரா எம்ஜிஆர் மீது பெருமதிப்புக் கொண்டிருந்தார்’. எவ்வளவு அப்பட்டமான பொய்?

ஆர்எஸ்எஸ், இந்துமுன்னணி, இந்து இயக்கங்கள் யாராவது இப்படி எம்.ஜி.ஆர் அவர்களை கேவலப்படுத்தியிருக்கிறார்களா? கொச்சைப்படுத்தியிருக்கிறார்களா என்று தேடித் தேடிப் பார்த்தாலும் ஒரு சான்றுகூட கிடைக்கவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

                                                                                                                                                                                              தொடரும்

2 Comments

  • Sundar says:

    Let’s wait for Jaya engira Hindu from ma Venkatesh these all are a pre planned saffron screening and brain washing theme for Jaya statue unveil function by modi

  • ஆர்யத்தமிழன் says:

    ம.வெ அவர்களுக்கே உள்ள ஆதார பதிவு உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Information
About Us
Frequnetly Asked Questions
International Shipping
Newsletter
Payment Options
Shipping & Returns
Privacy Policy
Terms & Conditions
Cancellation & Return Policy
How To Track My Order
Customer Service
Contact Us
Returns
My Account
My Account
Order History
Wish List
Newsletter
எமது முகவரி:
தடாகமலர் பதிப்பகம்,
No. 105, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை,
(திருவல்லிக்கேணி தபால் நிலையம் அருகில்)
திருவல்லிக்கேணி,
சென்னை - 600 005

தொலைபேசி எண் : +91 97909 24629

மின்னஞ்சல் முகவரி : sales@thadagamalar.com