இஸ்ரோவும் இல்லாத கழிப்பறைகளும்

பிப்ரவரி-15, 2017ல் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இதுவரையில் மனித குலத்தால் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. ஒரே ராக்கெட்டில் 103 செயற்கைக் கோள்களை ஒன்றாக விண்ணில் அனுப்பியிருக்கிறது. நிற்க, இது என்ன பெரிய ஆச்சரியம் என்று கேட்கிறீர்களா? உலகின் மிகவும் முன்னேறிய, வலிமை வாய்ந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா இதுவரை ஒரே ஏவுகணையின் மூலமாக செலுத்திய செயற்கைக் கோள்களின் எண்ணிக்கை 29. இதுவரை அதிக செயற்கைக் கோள்களை ஒரே முறையில் செலுத்திய உலக சாதனையை ரஷ்யா வைத்துள்ளது. அது 37 செயற்கைக் கோள்களை செலுத்தியது. ஆனால் இந்தியாதான் முதன் முதலாக 103 செயற்கைக்கோள்களை அனுப்பியிருக்கிறது. அதாவது முந்தையை சாதனையைப் போல் மூன்று மடங்கு பெரியது. இதுவரை இப்படி ஒரு சாதனையை எந்த நாடும் நிகழ்த்தவில்லை.

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ 1962ம் ஆண்டு அப்போதை பாரதப் பிரதமர் நேருவால் தொடங்கப்பட்டது. தொடங்கிய காலம் முதலே பல விமர்சனங்களையும் தோல்விகளையும் அது சந்தித்து வருகிறது. கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி வந்தது. இந்திய ராக்கெட்டுகள் என்றாலே கடலில்தான் விழும் என்று நையாண்டி செய்யப்பட்டது.

ஆனால் அதெல்லாம் பழைய கதை. கடந்த இருபது ஆண்டுகளாக இஸ்ரோ உலகமே வியக்கும் சாதனைகளைத் தொடர்ந்து நிகழ்த்தி வருகிறது. அப்படியானால் மக்கள் பாராட்டத்தானே வேண்டும்? அதுதான் இல்லை. அதுவும் சமீப காலங்களாக சமூக வலைத்தளங்களில் இந்தியாவில் பலருக்கு கழிப்பறைகளே இல்லாத சூழல் நிலவும்போது சந்திரனுக்கும் செவ்வாய்க்கும் செல்ல வேண்டிய அவசியமென்ன என்ற கேள்வியை பலர் எழுப்புகிறார்கள். மேலோட்டமாகப் பார்த்தால் அந்தக் கேள்வியில் நியாயம் இருப்பதாகத் தோன்றினாலும் சற்று ஆழமாகச் சிந்திக்கும்போது அதன் அபத்தம் புரியும்.

2016-17ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் இஸ்ரோவின் விண்வெளி ஆராய்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட தொகை 6959 கோடி ரூபாய். அந்தப் பணம் முழுக்க முழுக்க ஆராய்ச்சிக்காக என்றாலும் வெளிநாட்டு செயற்கைக் கொள்களை வெற்றிகரமாக ஏவியதால் 775 கோடி ரூபாயை லாபமாகவே சம்பாதித்தது இஸ்ரோ. இது முந்தைய ஆண்டை விட 15.8% அதிகமாகும். அதாவது இஸ்ரோ வெறும் பணத்தை செலவளிக்கும் ஆராய்ச்சி நிறுவனமாக இல்லாமல் ஓரளவு சம்பாதிக்கவும் செய்வது இதன் சிறப்பு. இது வெறும் ஆரம்பமே. ஆன்டிரிக்ஸ் என்ற பெயரில் தங்களது விண்வெளி சேவைகளை சந்தைப்படுத்தத் தொடங்கியிருக்கும் இஸ்ரோவின் முன்னால் விரிந்திருக்கும் விண்வெளி தொடர்பான சந்தை வாய்ப்பின் மதிப்பு 12,50,000 கோடிகள் என்று மதிப்பிடப்படுகிறது. அவ்வளவு பணம் உலகமெங்கும் விண்வெளியில் செலவிடப்படுகிறது. இஸ்ரோ ஒரு தெளிவான நோக்கத்துடன் அந்தப் பாதையில் கடந்த பத்து ஆண்டுகளாகப் பயணித்து வருகிறது. இன்னும் பத்து ஆண்டுகளில் இஸ்ரோ அரசாங்க பட்ஜெட்டை எதிர்பார்க்காமல் அரசாங்கத்துக்கே லாபம் சம்பாதித்துக் கொடுக்கும் ஒரு நிறுவனமாக வளர்ந்து நிற்கும் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன.

உதாரணமாக இந்தியா அனுப்பிய மங்கள்யான் 500 கோடி ரூபாய் செலவில் செவ்வாயை அடைந்தது. இது எத்தனை சிக்கனமானது என்றால் கிராவிடி என்ற விண்வெளி பற்றிய ஆங்கிலப்படத்துக்கே 670 கோடி செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது. அதே காலகட்டத்தில் அமெரிக்காவின் நாசா அனுப்பிய மாவென் என்ற செவ்வாய் விண்கலம் 4500 கோடி ரூபாயை விழுங்கியது. இந்தக் கலங்களின் நோக்கம், செயல்திறன் ஆகியவை வேறு வேறாக இருந்தாலும் இந்தப் பெரிய வேறுபாடு உலகெங்கிலும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. இதன் காரணமாக நாசாவிடம் சென்று அதீதப் பணம் செலுத்தி விண்கலங்களை அனுப்பிக் கொண்டிருந்த பலரும் இப்போது இஸ்ரோவை நோக்கிப் படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவு ஏன், அமெரிக்காவே தனது செயற்கைக்கோள்களை அனுப்பித் தரும்படி இந்தியாவிடம் வந்துவிட்டது. இந்த 103 செயற்கைக் கோள்களில் 88 அமெரிக்காவைச் சேர்ந்தவை. அமெரிக்காவில் உள்ள தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் இதை எதிர்த்துப் போர்க்கொடி தூக்கியிருப்பது தனி கதை. பிற நாடுகளை விடவும் குறைந்த செலவில் மட்டுமல்ல அதி துல்லியமாகவும் செயற்கைக்கோள்களை அனுப்பும் திறமையை இஸ்ரோ பெற்றுள்ளது.

நேரடி வருமானம் ஒரு பக்கம் இருக்க விண்வெளி ஆராய்ச்சி என்பது விண்வெளி மட்டும் தொடர்பான விஷயம் அல்ல. அந்த ஆராய்ச்சிகள் நடக்கும்போது பல சிறிய பயனுள்ள கண்டுபிடிப்புகள் தொடர்ந்து நிகழ்த்தப்படுகின்றன. அது வேறு பல துறைகளில் குறிப்பிடத் தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தும். இப்படியான ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு எடை குறைவான உலோகக் கலவையின் மூலம் செயற்கை உடலுறுப்புகள் செய்ய முடியும் என்று கண்டறிந்தார் அப்துல் கலாம். அதன் மூலம் விரிந்த புன்னகைகள் விண்வெளியில் எத்தனை ராக்கெட்டுகளை ஏவினாலும் கிடைத்திருக்காது என்று அவரே தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னேறிய கேமராக்கள், துல்லியமான ஆண்டெனாக்கள் என்று பல விஷயங்கள் விண்வெளி ஆராய்ச்சியிலிருந்து கிடைக்கின்றன. அது தவிர இந்த ஆராய்ச்சிகள் மூலம் உலக அளவில் இந்தியாவிற்குக் கிடைக்கும் பெருமைக்கு விலையே கிடையாது. தினமும் வெளிநாட்டினரிடம் பேசிப் பழகும் என் போன்றவர்கள் நமது நாட்டின் ஊழலையும் ஒழுங்கின்மையையும் பற்றிய பேச்சு வரும்போது சங்கடமாக நெளிய வேண்டியிருக்கும். நம்முடைய கடந்தகாலம், பாரம்பரியம் போன்றவை தாண்டி இப்படி எப்போதாவது நம் பெருமையைப் பேசக் கிடைக்கும் சமகால வாய்ப்புகள் அரிதுதான். அதற்காகவே இஸ்ரோ கொண்டாடப்பட வேண்டும்.

இஸ்ரோ இத்துடன் நிற்கவில்லை. இந்த சாதனைகளைத் தொடர்ந்து திரும்பத் திரும்ப பயனளிக்கும் விண்கலங்களை உருவாக்குவதில் இஸ்ரோ ஈடுபட்டிருக்கிறது. இதற்கான ரன்வே மட்டும் 5கிமீ இருக்குமாம். 2014ம் ஆண்டிலேயே மனிதர்கள் செல்லும் வகையில் ஒரு கூண்டை விண்வெளியில் செலுத்தி சோதித்துவிட்டது இஸ்ரோ. அதாவது மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் சோதனையில் முக்கியக் கட்டத்தை ஏற்கனவே அடைந்தாகிவிட்டது. 2021ம் ஆண்டில் அது முழுவதும் சாத்தியமாகிவிடும் என்கிறார்கள். சந்திரயான் – 2 என்ற அடுத்த கட்டப் பயணமும் தயார். சந்திரயான் -1 நிலவில் இறங்கவில்லை. ஒரு சிறு பகுதியை தொபுக்கடீர் என்று க்ராஷ் லேண்ட் செய்து மட்டும் சோதித்தது. சந்திரயான் -2 மூலம் ஒரு சிறிய விண்கலத்தை பூப்போல இறக்கி நிறுத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். அது போக சக்கரங்கள் வைத்த ஒரு வாகனத்தையும் நிலவின் பரப்பில் ஓட விடப்போகிறார்கள். விரைவில் நிலவுக்கு மனிதனை அனுப்பும் திறனையும் இஸ்ரோ பெறும்.

நிலவுக்கும் செவ்வாய்க்கும் சென்று ஆகப்போவது என்ன? அங்கே சென்று குருவிரொட்டியும் குச்சிமிட்டாயும் வாங்கி வர முடியாதுதான். எதிர்காலத்தில் நிலவுக்கும் செவ்வாய்க்கும் அடிக்கடி சென்று வரவேண்டிய ஒரு சூழல் வரலாம் என்று பரவலாக கருதப்படுகிறது. என்றாவது ஒரு நாள் பூமிக்கு ஒரு அழிவு வருகிறது எனும்போது, இந்த ஆராய்ச்சிகள் மனித குலத்தை முழுதும் அழிந்துவிடாமல் காக்கலாம். இவையெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் உண்மையில் அங்கே உள்ள தாதுப் பொருட்கள் மீதுதான் உலக நாடுகளுக்கு ஒரு கண். திடீரென்று ஒரு தங்க மலையோ யுரேனிய சுரங்கமோ கிடைத்துவிட்டால் முதலில் அங்கே செல்லும் நாடுதான் அதை சொந்தம் கொண்டாடும். பூமியில் இதுவரை இல்லாத ஒரு அபூர்வ உலோகம் கூட கிடைக்கலாம். ஒரு நாட்டின் தலையெழுத்தையே அது மாற்றிவிடும். இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, விண்வெளியில் சென்று நின்று பூமியை நோக்குவதன் மூலம் மனிதனுக்குப் பல்வேறு அனுகூலங்கள் இருக்கின்றன.

அதில் முக்கியமானது பாதுகாப்பு. உயரமான கோட்டை கொத்தளங்கள் உள்ள ஒரு நாட்டை எளிதில் வெல்ல முடியாதல்லவா, அதைப் போல. நம்முடைய மொபைல் போன்களில் இருக்கும் ஜிபிஎஸ் ஒரு அமெரிக்கத் தொழில்நுட்பம். அதுவும் அமெரிக்க ராணுவத்தின் தொழில்நுட்பம். கார்கில் போர் நடைபெற்ற காலகட்டத்தில் இந்திய ராணுவம் அதைத்தான் பயன்படுத்தியது. ஆனால் முக்கியமான கால கட்டத்தில் அமெரிக்கா அதைப் பயன்படுத்தும் அனுமதியை மறுத்து விட்டது. இந்த முடிவு அந்த நேரத்தில் இந்தியாவுக்குப் பெரிய பின்னடைவாக இருந்தது. ஆனால் அதன் பிறகு இஸ்ரோவின் பல கண்டுபிடிப்புகளாலும் முன்னேற்றங்களாலும் இந்தியா நாவிக் என்ற சொந்த புவியிடம் அறியும் தொழில்நுட்பத்தை சொந்தமாக்கிக் கொண்டுள்ளது. அமெரிக்கா 25 ஆண்டுகள் பல மடங்கு செலவுகளில் உருவாக்கியதை மூன்றே ஆண்டுகளில் இஸ்ரோ செய்து காட்டியது. இன்று நம்முடைய அண்டை நாடுகளுக்கான ஜிபிஎஸ் தொழில் நுட்பத்தை நாமே அளிக்கிறோம்.

இஸ்ரோவின் ஆராய்ச்சிகள் பல வகைகளில் நமது ராணுவத்துக்கு உதவி வருகின்றன. ராக்கெட் தொழில் நுட்பத்தில் ஏற்படும் அத்தனை முன்னேற்றங்களும் அனுபவங்களும் நம்முடைய ஏவுகணைகளின் பலத்தை அதிகரிக்கின்றன. ரஷ்யாவுடன் இணைந்து இந்தியா உருவாக்கிய ப்ராமோஸ் ஏவுகணைக்கு உலக அளவில் ஏக கிராக்கி. அதன் மூலம் நேரடி வருவாய் கிடைப்பது மட்டுமல்ல நம்முடைய பாதுகாப்பு பலம் அதிகரிப்பதால் இங்கே தொழில்கள் தொடங்க உலக அளவில் ஆர்வம் அதிகரிக்கும்.

இப்போது கழிப்பறை விவாதத்துக்கு வருவோம். ஒரு வாதத்துக்கு இஸ்ரோ இந்தியாவில் கழிப்பறை கட்டுவதற்காக அரசாங்கம் ஒதுக்கி வைத்த பணத்திலிருந்துதான் ராக்கெட் விடுகிறது, மங்கள்யான் செயற்கைக்கோள் அனுப்புகிறது, அந்தப் பணத்தை அப்படியே விட்டால் நம் அரசும் மக்களும் கழிப்பறை கட்டிக் கொண்டுவிடுவார்கள் என்று வைத்துக் கொள்வோம். இஸ்ரோவுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு கிட்டத்தட்ட 7000 கோடி என்று சொன்னேன் அல்லவா. இந்தியாவில் இப்போது பற்றாக்குறையாக கருதப்பட்டும் 11 கோடி கழிப்பறைகளைக் கட்ட 1,35,000 கோடி தேவைப்படுமாம். இஸ்ரோவை இழுத்து மூடிவிட்டால் கூட மீதமாகும் அதன் பட்ஜெட்டைக் கொண்டு கழிப்பறைகளைக் கட்டி முடிக்க முப்பது நாற்பது வருடங்கள் ஆகலாம். ஆனால் இஸ்ரோவைத் தொடர்ந்து நடத்துவதன் மூலம் ஒரு மலிவான கழிப்பறைக்கான தொழில் நுட்பத்தை அவர்கள் கண்டுபிடித்து இந்த செலவை பாதியாகக் குறைத்துவிடும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. அவர்கள் போகும் வேகத்துக்கு இந்தக் கழிப்பறைகள் கட்டுவதற்கு அரசாங்கத்துக்கு தேவையான பணத்தை அவர்களே விரைவில் சம்பாதித்துக் கொடுப்பார்கள் என்று நம்பலாம்.

அதற்காக இந்தியாவின் கழிப்பறை மற்றும் சுகாதாரத் தேவைகளின் அவசியத்தை நான் குறைத்து மதிப்பிடவில்லை. இந்தியா சந்திக்கவேண்டிய, தீர்வு காணவேண்டிய மிக மிக முக்கியமான பிரச்னை அது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அது தவிர உணவுப் பற்றாக்குறை, கல்வி என்று பல அடிப்படைத் தேவைகளும் நிறைவேற்றப்படவேண்டியவை. ஆனால் இஸ்ரோவை இந்த நோக்கத்தின் எதிரியாகப் பார்க்க முடியாது. இந்தியாவின் மாபெரும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண இஸ்ரோவின் ஆராய்ச்சிகளும் செயற்கைக்கோள்களும்தான் துணை நிற்கப் போகின்றன. அதற்கான அடிப்படைக் கட்டுமானத்தை அளிக்கப் போவது இஸ்ரோதான். பெரிய அளவிலான திட்டங்களை செயல்படுத்த பெரிய அளவிலான அடிப்படைக் கட்டுமானங்கள் அவசியமானவை. ஒரு இடத்தில் அடிப்படை மருத்துவ வசதிகளே இல்லை, இணைய வசதி தேவையா என்று கேள்வி எழுப்பலாம். ஆனால் ஸ்கைப் மூலம் நகரத்தில் உள்ள ஒரு பெரிய மருத்துவரை சிகிச்சை அளிக்கச் செய்ய முடியும். அவ்வளவு இருக்கட்டும், இஸ்ரோ மங்கள்யானையும், சந்திரயானையும் அனுப்பியிருக்காவிட்டால் நம்மில் எத்தனை பேர் கழிப்பறை குறித்துப் பேசியிருக்கப் போகிறோம்?

– ஷான் கருப்பசாமி

(பரணி இலக்கிய இதழில் வெளிவந்த கட்டுரை)

One Comment

  • SRanG says:

    Excellent article, the one thing the author has forgot to mention is the number of lives ISRO has saved during the cyclones in Andra Pradesh & Odissa. The cartosat which was built and launched by ISRO predicted the cyclone much earlier. This helped indian govt to evacuate lakhs and lakhs of people, which saved more than 10,000 lives.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Information
About Us
Frequnetly Asked Questions
International Shipping
Newsletter
Payment Options
Shipping & Returns
Privacy Policy
Terms & Conditions
Cancellation & Return Policy
How To Track My Order
Customer Service
Contact Us
Returns
My Account
My Account
Order History
Wish List
Newsletter
எமது முகவரி:
தடாகமலர் பதிப்பகம்,
No. 105, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை,
(திருவல்லிக்கேணி தபால் நிலையம் அருகில்)
திருவல்லிக்கேணி,
சென்னை - 600 005

தொலைபேசி எண் : +91 97909 24629

மின்னஞ்சல் முகவரி : sales@thadagamalar.com